தமிழகம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை பிடிக்காதது ஏன்? - இளங்கோவன் ஆதரவாளர்களிடம் சோனியா கேள்வி

எம்.மணிகண்டன்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சியான திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றபோது, காங்கிரஸ் ஏன் அதிக இடங்களை பிடிக்கவில்லை என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவாளர்களிடம் சோனியா காந்தி கேட்டுள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதுதொடர்பாக எழுந்த புகார்கள் காரணமாக தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ஈவிகேஎஸ் இளங் கோவன் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏற்றுக் கொண்டுள்ளார். புதிய தலைவர் இன்னும் நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவராக இளங்கோவனை மீண்டும் நியமிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுபற்றி கட்சித் தலைமையிடம் எடுத்துக் கூறுவதற்காக இளங்கோவன் ஆதரவு மாவட்டத் தலைவர்கள் சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்றனர்.

அவர்களில் 5 பேருக்கு மட்டுமே சோனியா காந்தியை சந்திக்க அனுமதி தரப்பட்டது. அதன்படி, மத்திய சென்னை மாவட்டத் தலைவர் என்.ரங்கபாஷ்யம், ஈரோடு மாவட்டத் தலைவர் ரவி, காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் வி.ஆர்.சிவராமன், திருப்பூர் மாவட்டத் தலைவர் கிருஷ்ணன், கோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த சரவணன் ஆகியோர் சோனியா காந்தியை டெல்லியில் நேற்று முன்தினம் சந்தித்தனர்.

அவர்களுடன் சோனியா காந்தி சுமார் அரை மணி நேரம் பேசி யுள்ளார். அப்போது, ‘கூட்டணியில் இருந்த திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளபோது, உங்க ளால் ஏன் சாதிக்க முடியவில்லை’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக மத்திய சென்னை மாவட்டத் தலைவர் என்.ரங்கபாஷ்யம் கூறியதாவது:

சோனியா காந்தியை சந்தித்த போது, தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக இளங்கோவன் கட்சியை எப்படி உயிர்ப்புடன் வைத்திருந்தார் என்பதற்கான சான்றுகளை அளித்தோம். ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள் பற்றிய விவரங்கள் அதில் அடங்கி யிருந்தன. உள்ளாட்சித் தேர்தலை கணக்கில்கொண்டு இளங்கோவ னையே தலைவராக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். அது தொடர்பாக பரிசீலிப்பதாக சோனியா காந்தி கூறினார்.

மேலும், ‘‘காங்கிரஸ் கட்சி 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மற்ற இடங்களில் தோற்றதற்கு என்ன காரணம்? திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதே’’ என்றும் சோனியா கேட்டார். அதற்கு பதிலளித்த நாங்கள், ‘‘காங்கிரஸ் போட்டியிட்ட இடங்களில் அதிமுக பெரிய அள வில் பணத்தை வாரி இறைத்தது. ஆகவே, குறைவான ஓட்டு வித்தி யாசத்தில் காங்கிரஸ் தோல்வியை தழுவினர்’’ என்று தெரிவித்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT