தமிழகம்

கவர்னர், முதல்வர், தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து

செய்திப்பிரிவு

புத்தாண்டையொட்டி தமிழக மக்களுக்கு கவர்னர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வலிமையும் வளமும் மிக்க தமிழகத்தைப் படைத்திட ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கவர்னர் ரோசய்யா: இந்த மகிழ்ச்சிகரமான புத்தாண்டில், அனைத்து சகோதர, சகோதரி களுக்கும் எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புத்தாண்டில் நமது நாட்டின் செல்வச் செழிப்பு மற்றும் வளம் மேம்பாடு அடையட்டும். நமது சக்தி மற்றும் நல்லிணக்கம் மேம்படவும் வாழ்த்துகிறேன்.

முதல்வர் ஜெயலலிதா: மக்களின் நல்வாழ்வுக்காக தமிழக அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்களை அனைவரும் முறையாகப் பயன்படுத்தி, தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதுடன், வலிமையும் வளமும் மிக்க தமிழகத்தைப் படைத்திட ஒன்றுபட்டு உழைத்திட வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் புத்தாண்டு புதிய நம்பிக்கை, எழுச்சி, மலர்ச்சி மற்றும் வளர்ச்சியை வழங்கும் ஆண்டாக மலரட்டும்.

திமுக தலைவர் கருணாநிதி: தமிழகத்தில் மக்கள் இருளில் தவிக்கும் நிலை தொடர்கிறது. அனைத்து தொழில்களும் முடங்கி, தொழிலாளர் சமுதாயம் அல்லல்படுகிறது. விலைவாசி உயர்வு மக்களுக்கு வேதனை யையே பரிசாகத் தந்துள்ளது. 2013ல் நாம் கண்ட இவையெல்லாம் களையப்பட வேண்டும். தமிழுக்கும் தமிழர்க்கும் தமிழகத்துக்கும் பயன் தரும் பணிகளோடு, நாட்டுக்கு வலிவையும் பொலிவையும் தந்திடத்தக்க கடமைகள் ஆற்றிட ஒன்றுபட்டு உழைத்திடுவோம். புத்தாண்டு புத்துணர்வு வழங்கட்டும்.

விஜயகாந்த் (தேமுதிக): தொடரும் மின்வெட்டு, விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், மீனவர் பிரச்சினை என தமிழகத்தில் மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. இந்தப் புத்தாண்டு முதல் வெளிச்சத்தில் வாழும் நிலை வரவேண்டும். இருண்டு கிடக்கும் இலையுதிர் காலம் போய், வெற்றி முரசு கொட்டும் ஒளிமயமான காலமாக புத்தாண்டு இருக்க வேண்டும்.

பி.எஸ்.ஞானதேசிகன் (தமிழக காங்கிரஸ்): உணவுப் பாதுகாப்புச் சட்டமும் லோக்பால் மசோதாவும் மத்திய அரசின் இரண்டு அருஞ்சாதனைகள். சாதி, மத, இன வேறுபாடுகளை மறந்து, ஒருமைப்பாட்டு உணர்வோடு ஒன்றிணைந்து உழைப்போம், உயர்வோம் என்று புத்தாண்டில் உறுதியேற்போம்.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): புதிய ஆண்டு மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்கும் ஆண்டாகவும், மக்கள் வாழ்வை சூறையாடும் தாராளமயக் கொள்கையை பின்னுக்குத் தள்ளும் ஆண்டாகவும் அமைந்திட வேண்டும்.

தா.பாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி): இந்திய நதிகளை இணைக்கும் திட்டத்தை வற்புறுத்துவதோடு, இதை நிறைவேற்றக்கூடிய அரசு அமைய 2014-ல் நடக்கவுள்ள தேர்தலைப் பயன்படுத்த வேண்டும்.

ராமதாஸ் (பாமக): சோதனைகளுக்குப் பின்னே, சாதனைகள்தான் அணிவகுக்கும் என்ற நம்பிக்கையுடன் 2014 பிறக்கிறது. மக்களவைத் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவும், தமிழகத்தில் இருந்து நல்லவர்களையும் திறமையானவர்களையும் தேர்ந் தெடுக்கவும் மக்கள் உறுதியேற்க வேண்டும்.

வைகோ (மதிமுக): சுற்றுச் சூழலைக் காக்கவும் பசி இல்லாத, நோய் இல்லாத வாழ்வைப் பெறவும், மனித நேயம் எங்கும் தழைக்கவும், பூக்கும் புத்தாண்டில் வழி அமைப்போம். சுதந்திரத் தமிழ் ஈழம் மலரவும் தாய்த் தமிழகத்தின் வாழ்வாதாரங்கள் காப்பாற்றப்படவும், ஊழல் அற்ற அரசியல் வெற்றி பெறவும் சூளுரைப்போம்.

SCROLL FOR NEXT