ஆயுத பூஜையை முன்னிட்டு திருச்சி, திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஆயுத பூஜையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன்படி, திருநெல்வேலி- சென்னை எழும்பூர் இடையே அக்டோபர் 11-ம் தேதி சுவிதா சிறப்பு ரயில் (வண்டி எண் 82604) இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
இதேபோல், அக்டோபர் 12-ம் தேதி திருநெல்வேலி- சென்னை எழும்பூர் இடையே சுவிதா சிறப்பு ரயில் (82602) இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு எழும்பூர் சென்றடை யும்.
சென்னை எழும்பூர்- திருச்சி இடையே அக்டோபர் 12-ம் தேதி சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (06025) இயக்கப்படுகிறது. இந்த ரயில் காலை 8.30 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு அன்று மதியம் 2.15 மணிக்கு திருச்சி சென்றடையும். சென்னை எழும்பூர்- திருநெல்வேலி இடையே அக்டோபர் 21-ம் தேதி சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (06001) இயக்கப்படுகிறது. இந்த ரயில் எழும்பூரில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். மறுமார்க்கத்தில் இந்த ரயில் (06002) அக்டோபர் 23-ம் தேதி திருநெல்வேலியில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு எழும்பூர் வந்தடை யும்.
சென்னை சென்ட்ரல்- எர்ணாகுளம் இடையே அக்டோபர் 7-ம் தேதி சுவிதா சிறப்பு ரயில் (82621) இயக்கப்படுகிறது.
இந்த ரயில் சென்னை சென்டரலில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.55 எர்ணாகுளம் சென்றடையும்.
மேற்கண்ட ரயில்களுக்கான முன்பதிவு இன்று (28-ம் தேதி) தொடங்குகிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.