சென்னை சென்ட்ரல் முதல் பேசின் பிரிட்ஜ் வரை அமைக்கப்பட்டுள்ள 2 புதிய ரயில் பாதைகளில் நேற்று சோதனை முறையில் ரயில்கள் இயக்கப்பட்டன.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் மூர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் 200 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். போதிய ரயில் பாதைகள் இல்லாததால் பேசின் பிரிட்ஜ் முதல் சென்னை சென்ட்ரல் வரை மின்சார ரயில்கள் தொடர்ந்து தாமதாக வருகின்றன.
இதற்கிடையில், பேசின் பிரிட்ஜ் முதல் சென்னை சென்ட்ரல் வரை 5, 6-வது புதிய பாதைகள் அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. தற்போது இந்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், கடந்த 2 வாரங்களாக மின்சார ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் நிறைவடைந்துள்ளதால், புதிய பாதைகளில் நேற்று ரயில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்டஜோக்ரி மற்றும் அதிகாரிகள் ரயில்களில் சென்று ஆய்வு நடத்தினர்.
இப்பாதைகளில் அக்டோபர் 7-ம் தேதி சோதனை முறையில் ரயில்கள் இயக்கப்படும். பின்னர் இந்தப் பாதைகளில் முறையாக ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.