தமிழகம்

தொடர் மரணங்களுக்கு மாந்திரீகம் காரணமா? - நாகை அருகே அச்சத்தில் கிராம மக்கள்

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம் அருகே மாந்திரீகம் செய்வதால் தொடர்ந்து மரணங்கள் ஏற்படுவதாக கிராம மக்கள் அளித்த புகாரின்பேரில், இருவரை போலீஸார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம் அருகேயுள்ள குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஹரிகரன் மகன்கள் முத்து, கார்த்தி (எ) ஜெயராமன் ஆகியோர் மாந்திரீக வேலைகள் செய்து வருவதாகவும் இதனால் ஊரில் கடந்த 5 மாதங்களில் 11 பேர் மரணமடைந்து விட்டதாகவும் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் பொதுமக்கள் நேற்று முன்தினம் முறையிட்டனர். இதையடுத்து, போலீஸார் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிச்சியை சேர்ந்த கலியபெருமாள் (48) என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் நேற்று முன்தினம் எரியூட்டப்பட்டது. உடல் சரியாக எரிந்துள்ளதா என்பதையறிய, கலியபெருமாளின் மகன் கலைச்செல்வன் நேற்று காலை சுடுகாட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, எரிந்த சடலத்தின்மீது மூன்று சேவல்கள் எரிந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த கலைச்செல்வன், முத்துவின் வீட்டுக்குச் சென்று இதுகுறித்து விசாரித்துள்ளார். ஏற்கெனவே கலியபெருமாளுக்கும், முத்துவுக்கும் தகராறு இருந்துள்ளது. இதனால், முத்துவின் மாந்திரீகத்தால்தான் கலியபெருமாள் விபத்துக்குள்ளானார் என்றும், அவர் இறந்ததும் அவரது சிதை மீது சேவலை வெட்டிப் பலி கொடுத்துள்ளார் என்றும் கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து முத்துவிடம் போலீஸார் விசாரித்தபோது, தாங்கள் சுடுகாட்டில் பூஜை செய்தது உண்மைதான் என்றும், கலியபெருமாள் உடல்மீது எந்த பூஜையும் செய்யவில்லை, அதிலிருந்து 15 அடி தூரத்தில்தான் பூஜை செய்தோம் என்றும் தெரிவித்துள்ளார். அவர்கள் பூஜை செய்த இடத்தை தோண்டிப் பார்த்ததில், மண்ணால் செய்த மனித உருவம், மண்டை ஓடு, கை எலும்பு கிடந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாரணைக்குப் பின் இருவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

கலியபெருமாள் இறப்பதற்கு 16 நாட்களுக்கு முன்பு, அவரது தந்தை முத்துசாமி இறந்துள்ளார். இதுவும் மாந்திரீகத்தால்தான் என்று குறிச்சி கிராம மக்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT