தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கைக் கொண்டுவர முதல்வர் உத்தரவிட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு 500 மதுக்கடைகளை மூடுவதாக இன்று அறிவித்துள்ளது. 500 மதுக்கடைகளை மூடுவது என்பது வரவேற்கத்தக்க அறிவிப்பாக இருந்தாலும், முழுமையான மதுவிலக்கே தமிழக மக்களுக்கு பயனளிப்பதாக இருக்கும் என மனிதநேய மக்கள் கட்சி கருதுகின்றது.
தமிழகத்தின் கிராமம் மற்றும் நகரங்களில் உள்ள அடித்தட்டு, நடுத்தர வர்க்கத்து குடும்பங்களில் உள்ள ஆண்கள் பெரும்பாலானவர்களும் இளைய வயதினரும் இப்போது மதுவுக்கு அடிமையாகி விட்டனர். குடும்பங்களின் மீது பற்றின்றி, தன் பிள்ளைகளின் படிப்பு, எதிர்காலம் குறித்த சிந்தனை இன்றி, வேலைக்குச் சென்று கிடைக்கும் பணத்தில் குடிப்பது ஒன்றையே கடமையாகக் கொண்டுள்ளனர்.
மதுக்கடைகளை முழுமையாக மூடவேண்டும் என்பதே தமிழக மக்களின் குறிப்பாக தாய்மார்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. மக்களின் இந்த உணர்வுகளை ஓரளவிற்கு உணர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா 500 மதுக்கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டார்கள். ஆனால் மூடப்பட்ட இந்தக் கடைகள் குறைந்த அளவில் மது விற்பனை செய்த கடைகளே.
தற்போதுள்ள அசாதாரண அரசியல் சூழ்நிலையில் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி வெறும் 500 கடைகளை மூட உத்தரவிட்டிருப்பது முழுமையான பலனைத் தராது.
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவிட்டு, தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கைக் கொண்டுவர முதல்வர் உத்தரவிட வேண்டும்'' என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.