தமிழகம்

வேந்தர் மூவீஸ் மதன் விவகாரம்: ராமதாஸுக்கு பாரிவேந்தர் கண்டனம்

செய்திப்பிரிவு

மதன் சம்பந்தப்பட்ட வழக்கில் சிறப்பு விசாரணைக் குழுவை நீதிமன்றமே அமைத்துள்ள நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் சிபிஐ விசாரணை கோருவது வழக்கை திசை திருப்பும் முயற்சி என்று ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மற்றும் வேறு பல கல்லூரிகளில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி மாணவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகியுள்ள மதன் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்தச் சூழலில், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் மீதும், தனிப்பட்ட முறையில் என் மீதும் பாமக நிறுவனர் ராமதாஸ் அடுக்கடுக்கான பொய்களை சொல்லி வருகிறார்.

சரிந்து வரும் தனது அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்ள யாரையாவது எதிரியாக சித்தரித்து, அவர்களை எதிர்ப்பதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவது ராமதாஸின் வாடிக்கை. தமிழகம் முழுவதும் அண்ணன் - தம்பிகளாக பழகி வரும் வன்னியர் சமுதாயத்தினர், பார்க்கவ குலத்தினர் இடையே விரோதத்தை வளர்த்துவிட ராமதாஸ் முயற்சிக்கிறார்.

மதன் சம்பந்தப்பட்ட வழக்கில், காவல்துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை நீதிமன்றமே அமைத்துள்ளது. இந்நிலையில் சிபிஐ விசாரணை வேண்டுமென்று ராமதாஸ் உள்நோக்கத்தோடு கூறுவது வழக்கை திசை திருப்பும் முயற்சி அல்லவா?

திண்டிவனத்தில் சாதாரண டாக்டராக இருந்த ராமதாஸ், பல்லாயிரம் கோடிகளுக்கு எப்படி அதிபதியானார்? 45 ஆண்டுகாலமாக சிறு பள்ளியில் தொடங்கி படிப்படியாக முன்னேறி உலகத்தரம் வாய்ந்த எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தை உருவாக்கிய என்னைப் பார்த்து அவர் குற்றம்சாட்டுவது வேடிக்கையாக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி, முறைகேட்டில் ஈடுபட்டதாக சிபிஐ குற்றம்சாட்டியது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது 2 திராவிடக் கட்சிகளுக்கும் இணையாக பாமக சார்பிலும் கோடி கோடியாக பணம் செலவழித்து செய்தித்தாள்களில் விளம்பரம் செய்யப்பட்டது. இதற்கு எங்கிருந்து பணம் வந்தது? யாரோ சில வழிப்போக்கர்கள் பாடும் வஞ்சக பாட்டுக்கு ராமதாஸ் பின்பாட்டு பாட வேண்டாம்.

இவ்வாறு பாரிவேந்தர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT