தமிழகம்

முதல்வர் குறித்த மேயரின் பாராட்டுரைக்கு கண்டனம்: எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு

செய்திப்பிரிவு

மேயர் சைதை துரைசாமியின் முதல்வர் குறித்த பாராட்டுரையை கண்டித்து திமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் நேற்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சென்னை மாநகராட்சியின் நேற்றைய மாமன்ற கூட்டத்தில், சென்னை மற்றும் இதர மாநகராட்சிகளில் மேயர் பதவி தேர்வில் மாற்றம் கொண்டு வந்தது உள்ளிட்ட முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட பணிகள் குறித்து, மேயர் சைதை துரைசாமி பாராட்டுரை நிகழ்த்தினார். பாராட்டுரையை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்சினையை பேச வாய்ப்பு தர வேண்டும் என்று திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். மேயர் பாராட்டுரையை தொடர்ந்த நிலையில், அதை கண்டித்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதற்கு பதில் அளித்த மேயர் சைதை துரைசாமி, “மக்கள் பிரச்சினை தொடர்பாக என்னிடம் நேரடியாக இதுவரை திமுகவினர் எந்த கேள்வியையோ, கோரிக்கை மனுவையோ கொடுத்ததில்லை. அவர்களிடம் மக்கள் நலன் இல்லை. வெளிநடப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே திமுகவினர் மன்றத்துக்கு வருகின்றனர்” என்றார்.

மன்ற கூட்டத்தின் முடிவில், நிருபர்களை சந்தித்த திமுக உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ், “கேள்விகளையும், கோரிக்கை மனுக்களையும், மேயரிடம்தான் கொடுக்க வேண்டும் என்று மேயர் கூறுகிறார். அவரை சந்திக்க முடியவில்லை. அதனால் மன்றச் செயலரிடம் கொடுக்கிறோம். அவர் பிரச்சினையை திசை திருப்பும் வகையில், நாங்கள் எந்த கேள்வியும் கேட்கவில்லை என்று கூறுகிறார். அவர் கூறியது முற்றிலும் தவறானது. நாங்கள் கேள்விகளையும், கோரிக் கைகளையும் அளித்ததற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT