யானைக்கவுனி பகுதியில் இரவில் இடம் தெரியாமல் வழிகேட்டவரிடம் வழிப்பறி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுக்கா இரும்புகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் அந்தோணி (23). சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு, திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு மேன்ஷனில் தங்கி யிருக்கிறார். கடந்த 20-ம் தேதி சொந்த வேலையாக சென்னை எண்ணூர் பகுதிக்கு சென்றுவிட்டு, பஸ்ஸில் ஏறி திருவல்லிக்கேணிக்கு திரும்ப வந்துகொண்டிருந்தார். இரவு நேரம் என்பதால் இடம் தெரியாமல் யானைக்கவுனி பகுதி யில் இறங்கிவிட்டார். இரவு 9.30 மணியளவில் யானைக்கவுனி பாலம், எம்.ஜி.ஆர்.சிலை அருகில் நின்றுகொண்டிருந்த 4 பேரிடம் திருவல்லிக்கேணிக்கு செல்வதற்கு வழி கேட்டிருக்கிறார் ஜான்சன்.
உடனே அந்த 4 பேரும், அருகிலிருந்த இருட்டான தெரு வழியாக செல்ல வேண்டும் எனக் கூறிவிட்டு, ஜான்சனுக்கு தெரி யாமல் பின்தொடர்ந்து சென்று, ஜான்சனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் வைத்திருந்த செல் போன், பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து யானைக்கவுனி காவல் நிலையத்தில் ஜான்சன் புகார் கொடுத்தார். போலீஸார் விசாரணை நடத்தி வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட சண்முகம், ஆகாஷ், சுரேந்திரன், மணி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இதில், சுரேந்திரன் மீது ஒரு கொலை முயற்சி வழக்கும், 2 திருட்டு வழக்குகளும் உள்ளன. சண்முகம் மற்றும் ஆகாஷ் ஆகியோர் கடந்த 18-ம் தேதி அதிகாலை அதேப் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரைக் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவத் தில் போலீஸாரால் தேடப்பட்டு வந்தவர்கள். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசார ணைக்குப் பின்னர் 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.