தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரதமர் மன்மோகன் சிங்கை டெல்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது அரிசி மீதான சேவை வரியை குறைக்க அவர் கோரிக்கை விடுத்தார்.
தேமுதிகவின் 21 எம்.எல்.ஏக்களுடன் டெல்லி சென்ற கட்சியின் தலைவர் விஜயகாந்த் பிரதமரை சந்தித்துப் பேசினார்.
அப்போது பிரதமரிடம் அவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளும்பணி தமிழக அரசின் ஆசீர்வாதத்துடன் நடப்பதாக தமிழக மக்கள் நம்புகிறார்கள். இதில் அரசின் உயர் அதிகாரிகளுக்கும் மணல், கனிமவளங்களை கொள்ளை யடிக்கும் மாபியாக் களுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது.
கனிமங்கள் எடுப்பதற்கான உரிமங்களில் 86 சதவீதத்தை வி.வி.மினரல்ஸ் மற்றும் அதன் சார்பு நிறுவனங்களுக்கு தமிழக அரசு அளித்துள்ளது. அவர்கள் கனிம சட்டவிதிகளைப் பின்பற்றுவதில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை மற்றும் போலீஸில் அளிக்கப்பட்ட புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அதிமுக ஆட்சிக்கு வந்தபின் தமிழகம் அமைதி மாநிலமாக மாறியதாக முதல்வர் ஜெயலலிதா கூறுகிறார். ஆனால் தமிழக காவல் துறையின் தற்போதைய புள்ளிவிவரத்தின்படி 2013-ம் ஆண்டில் 26 சதவீத குற்றங்கள் பெருகியுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் கொலைக்குற்றங்கள் 4,000- ஐ தாண்டிவிட்டன. சென்னை, காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் குண்டர்கள், ரவுடிகள் மிக அதிகமாக உள்ளனர்.
செயின் பறிப்பு, திருட்டு, கொள்ளை சம்பவங்கள் அதிகமாகிவிட்டன. மதம் மற்றும் போராட்டக் கலவரங்கள் மாவட்டங் களில் பெருகி வருகின்றன. சட்டம் ஒழுங்கு கட்டுப்படுத்துவதில் தமிழக அரசின் இயலாமையால் மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர் களிடம் விஜயகாந்த் கூறியதாவது:
தமிழக மீனவர் பிரச்சினை, கர்நாடகம், கேரள மாநிலங்களுடன் நிலவும் தண்ணீர் பிரச்சினை, மின்சாரப் பிரச்சினைகள் குறித்துப் பேசினேன். நான் நேரில் வந்து பேசியதுபோல் தமிழக முதல்வரும் தன்னை வந்து சந்தித்து கூறலாமே எனக் பிரதமர் கூறினார். தமிழக மக்களுக்காக முதல்வர் வெறும் கடிதங்களை எழுதாமல் பிரதமரை நேரில் வந்து சந்திக்கலாமே?
மேலும் அரிசி மீதான சேவை வரியை நீக்க வேண்டும் என பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன். மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்காததால் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரிய தடை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து பிரதமரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த விஜயகாந்த், கூட்டணி குறித்து பிரதமரிடம் பேசவில்லை, கூட்டணியை முடிவு செய்ய தேர்தல் வரும் வரை இன்னும் காலம் இருக்கிறது என்று தெரிவித்தார்.