தமிழகம்

அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் கேட்டு கோவணம் உடுத்தி படுத்துக் கிடந்து விவசாயிகள் போராட்டம்

செய்திப்பிரிவு

எழும்பூர் ரயில் நிலைய நடைமேடையில் உயிரிழந்த விவசாயி

அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் கேட்டு, கோவணம் உடுத்தி எழும்பூர் ரயில் நிலைய நடைமேடையில் படுத்துக் கிடந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் விவசாய பயிர்கள் அனைத்தும் கருகிவிட்டன. வாழ வழியின்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப் படுகிறது. மற்றவர்களுக்கு நிவாரணம் கொடுக்க மறுக் கின்றனர். முழுவதும் அழிந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5,465 மட்டும் கொடுக்கின்றனர். வறட்சி யால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், தலைமைச் செயலகம் முன்பு பிப்ரவரி 7-ம் தேதி போராட் டம் நடத்தப்போவதாக அறிவிக் கப்பட்டது.

அதன்படி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு, பொதுச் செயலாளர் பழனிவேல், துணைத் தலைவர் ஜெ.பி.கிருஷ்ணன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சியில் இருந்து ரயில் மூலம் நேற்று காலையில் எழும்பூர் ரயில் நிலையம் வந்தனர். இதையறிந்த போலீஸார் அவர் களை ரயில் நிலையத்திலேயே வழிமறித்து திரும்பிப்போக கூறினர். ஆனால் விவசாயிகள் போக மறுத்து ரயில் நிலைய நடை மேடையிலேயே சட்டை, வேஷ்டியை கழட்டி, கோவணம் உடுத்தி படுத்துக் கிடந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். வறட்சியில் சிக்கியுள்ள விவசாயிகள் எலி, பாம்பு கறி சாப்பிடுவதை விளக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் எலி, பாம்பு கறி சாப்பிட்டனர். உடனே, போலீஸார் அவர்களை கைது செய்து அருகே இருந்த மண்டபத்தில் அடைத்து வைத்தனர். மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.

மாரடைப்பில் விவசாயி பலி

பின்னர் அந்த விவசாயிகள் எழும்பூர் ரயில் நிலையத்தில் 9-வது நடைமேடையில் இருந்து ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருச்சி செல்ல திட்டமிட்டு இருந்தனர். அப்போது திருச்சி மாவட்டம் மறவனூர் பகுதியை சேர்ந்த முத்தரசன்(65) என்ற விவசாயிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கிவிழுந்து பரிதாப மாக இறந்தார். இது குறித்து எழும்பூர் ரயில் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

SCROLL FOR NEXT