நாகை மாவட்டம் பூம்புகாரில் நேற்று கடலில் குளித்தபோது அலையில் இழுத்துச் செல்லப்பட்டு பிளஸ் 2 மாணவர்கள் 3 பேர் பலியாகினர்.
மயிலாடுதுறையில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவர்கள் 7 பேர் புத்தாண்டை கொண்டாட நேற்று காலை பூம்புகார் கடற்கரைக்கு சென்றுள்ளனர்.
அங்கு துறைமுகப் பணிகள் நடை பெற்றுவரும் ஆட்கள் இல்லாத பகுதி யில் மாணவர்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எழுந்த பெரிய அலையில் மாணவர்கள் கடலின் ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து தங்களை காப்பாற்றும்படி அவர்கள் அபயக் குரல் எழுப்பினர்.
இவர்களின் அலறலைக் கேட்டு, அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் விரைந்து சென்று கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த ஆறுமுகம் மகன் தமிழ்மாறன், மணிமாறன் மகன் ராதாகிருஷ்ணன், சம்பந்தம் மகன் அருண் குமார், ஆசைத்தம்பி மகன் சுதாகரன் ஆகியோரை மீட்டு கரைசேர்த்தனர்.
எனினும், மயிலாடுதுறை நல்லத்துக் குடியைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் ஜீவசக்தி(17), கீழநாஞ்சில்நாட்டைச் சேர்ந்த சிவஞானம் மகன் ராஜசுதாகர்(17), கொரநாட்டைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் அர்ஜுன்(17) ஆகிய மூவரையும் மீட்க முடியவில்லை.
தகவலறிந்த பூம்புகார் கடலோரக் காவல்படையினர், தீயணைப்புத் துறை யினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு ஜீவசக்தியின் உடல் மட்டும் கரை ஒதுங்கியது. மற்ற இருவரின் உடலைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.