ஸ்ரீபெரும்புதூர் அடுத்த போந்தூர் பகுதியில் தனியார் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான 10 டன் செம்மரங்களை ஆந்திர போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த சதுரகிரி பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு செம்மரம் கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்களிடம் சதுரகிரி போலீஸார் விசாரணை நடத்தினர். கடத்தப்பட்ட மரங்கள் அனைத்தும் பெரும்புதூர் பகுதியில் பதுக்கி வைத்து வெளிநாடுகளுக்கு விற்கப்படுவதாக விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து சதுரகிரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் சிவபிரசாத், சீனிவாசலு ஆகியோர் தலைமையிலான போலீஸார் கடந்த 3 நாட்களாக பெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாதாரண உடையில் முகாமிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், செம்மரம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, தாம்பரம் அடுத்த மேடவாக்கம் பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்த கிருபாகரன்(59) என்பவரி டம் நடத்தப்பட்ட விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்தன. அவர் அளித்த தகவலின் பேரில், பெரும்புதூர் அடுத்த போந்தூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் கிடங்கில் செம்மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், வல்லம் வருவாய் ஆய்வாளர் சசிகுமார், போந்தூர் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையில், தனியார் கிடங்கின் பூட்டை உடைத்து உள்ளே சென்று ஆய்வு நடத்தினர். அப்போது கிடங்கில் செம்மரங்கள் இருப்பது கண்டறியப்பட்டது .
இவை அனைத்தும், சுமார் 10 டன் எடையுள்ள பி கிரேடு கொண்ட மரங்களாகும். 395 துண்டுகளாக இருந்த, அவற்றின் மொத்த மதிப்பு ரூ.2.5 கோடி ஆகும். அவற்றையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சம்பந்தப்பட்ட தனியார் கிடங்கு, சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியைச் சேர்ந்த லஷ்மிநாராயணன்(61) என்பவருக்கு சொந்தமானது என்றும், 2 ஆண்டுகளுக்கு முன்பு தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு கிடங்கு வாடகைக்கு விடப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. தலைமறைவாக உள்ள பிரகாஷை சதுரகிரி போலீஸார் தேடி வருகின்றனர்.