தமிழகம்

புதுச்சேரி, காரைக்காலில் வறட்சி பாதிப்பு: மத்தியக் குழு இரு அணிகளாக பிரிந்து ஆய்வு

செய்திப்பிரிவு

புதுச்சேரி வந்துள்ள மத்திய குழு இரு அணிகளாக பிரிந்து ஓரே நாளில் இன்று புதுச்சேரி, காரைக்காலில் வறட்சி நிலை குறித்து ஆய்வு செய்யும் பணியை தொடக்கியது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்தது. இதனால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதுபோல் புதுச்சேரி, காரைக்காலில் வறட்சி பாதித்த இடங்களை மத்திய நிபுணர் குழுவை அனுப்பி, ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி மத்திய அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்தி வந்தார்.

அதனடிப்படையில் மத்திய வேளாண்துறை இணை செயலாளர் ராணி குமுதினி தலைமையிலான குழு புதுச்சேரிக்கு நேற்று வந்தது. இக்குழுவில் 11 பேர் இடம் பெற்றுள்ளனர்.

புதுச்சேரி தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

அதன் தொடர்ச்சியாக இன்று இரு அணிகளாக பிரிந்து புதுச்சேரி, காரைக்கால் சென்று மத்திய குழு பார்வையிடும் பணியை தொடக்கினர்.

மத்திய வேளாண் இணைச் செயலர் ராணி குமுதினி தலைமையிலான குழு புதுச்சேரியில் பத்துக்கண்ணு, காட்டேரிக்குப்பம், சோரப்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும், மத்திய அரசு அதிகாரி பொன்னுசாமி தலைமையிலான குழு காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி, திருவெட்டிக்காடு, புத்தகுடி, டிஆர் பட்டினம், வாஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் வறச்சி பாதிப்பு குறித்து ஆய்வு செய்தனர்.

அங்குள்ள விவசாயிகளிடம் வறட்சி நிலவரம் குறித்து மத்திய குழுவினர் கேட்டறிந்தனர்.

பத்துக்கண்ணு பகுதியில் காய்ந்த வயலில் நெல்லுடன் விவசாயிகள் காத்திருந்தனர். தங்கள் பாதிப்புகளை மத்திய குழுவிடம் தெரிவித்தனர். விவசாயி சீனிவாசன் தனது வயலில் விளைச்சல் குறைந்துள்ளதை தெரிவித்தார். அவர் கூறுகையி்,"8 ஏக்கரில் நெற்பயிரிடுவேன். தற்போது வறட்சியால் 3 ஏக்கர் மட்டுமே பயிரிட்டுள்ளேன். வறட்சியால் இம்முறை அதிகளவு பாதிப்பு உள்ளது" என்று குறிப்பிட்டார்.

விவசாயி சுப்பராயன் கூறுகையில்,"வறட்சியால் பல விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளோம்" என்றார்.

அரசு வட்டாரங்களில் கூறுகையில், "சாகுபடி செய்யப்பட்ட பயிர்களில் 35 சதவீதம் மேல் பாதிப்பு இருந்தால் வறட்சி நிவாரணம் வழங்கப்படும் என்பது மத்திய அரசின் வழிகாட்டுதலாகும்.இக்குழு மத்திய அரசுக்கு வறட்சி குறித்து அறிக்கை தாக்கல் செய்வர். அதனடிப்படையில் மத்திய அரசு புதுச்சேரிக்கு நிவாரணம் வழங்கும்" என்று குறிப்பிடுகின்றனர்.

மோசமான வாகனம் ஏற்பாடு: மத்தியக்குழு ஆய்வுக்காக பத்திரிக்கையாளர்களுக்கு மிகவும் மோசமான வாகனத்தை அரசு அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். குழுவினரை தொடர முடியாமல் அவதியமடைந்தனர். அதையடுத்து அவ்வாகத்திலிருந்து இறங்கி போலீஸ் வாகனம் உட்பட மாற்று வாகனங்களில் பத்திரிக்கையாளர்கள் பயணித்து செய்தி சேகரித்தனர்.

SCROLL FOR NEXT