தமிழகம்

சிறிய பஸ்களில் இலை படம்: ஜெ. மனுவை நிராகரிக்க நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

அரசு சிறிய பஸ்களில் இலை படங்களை மறைப்பது தொடர்பான வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள மனுவை நிராகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

அரசுப் போக்குவரத்துக் கழக சிறிய பஸ்களில் வரையப் பட்டுள்ள இலை படங்கள், அதிமுகவின் இரட்டை இலை சின்னம்போல இருப்பதால், அந்தப் படங்களை மறைக்க வேண்டும் என்று கோரி திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது. அதை பரிசீலித்த தேர்தல் ஆணையம், சிறிய பஸ்களில் உள்ள இலை படங்களை மறைக்க அண்மையில் உத்தரவிட்டது.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ‘தங்கள் தரப்பு கருத்தை கேட்காமல் தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவு சட்ட விரோதமானது’ என்று மனுவில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இந்நிலையில், ஜெயலலிதா வின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தாக்கல் செய்துள்ள பதில் மனு வில் கூறியிருப்பதாவது: சிறிய பஸ்களில் வரையப்பட் டுள்ளது இரட்டை இலை சின்னமே அல்ல என்று அதிமுக தரப்பில் வாதிடுகின்றனர்.

இந்தச் சூழலில் அரசு பஸ்களில் வரையப்பட்டுள்ள படத்தை அகற்ற வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தர வால் அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்பட்டதாகக் கூற முடியாது. ஆகவே, அந்தக் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணைக்கே உகந்தது அல்ல.

நாடாளுமன்றத் தேர்தலை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்தும் நோக்கில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் இது போன்ற நடவடிககைகள் பற்றி கேள்வி எழுப்ப முடியாது. ஆகவே, அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு பதில் மனுவில் பிரவீன்குமார் கூறியுள் ளார். இந்த வழக்கு, உயர் நீதிமன்ற முதன்மை அமர்வில் இன்று (வியாழன்) விசாரணைக்கு வருகிறது.

SCROLL FOR NEXT