மீனவர்களின் வாழ்விடம், வாழ் வாதாரத்தை பாதிக்கிற வகையில் கடற் கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை யில் மத்திய அரசு திருத்தம் செய்யக் கூடாது என்று மீனவ சங்கங்கள், மீனவர் கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக சென்னை, திருவள் ளூர், காஞ்சிபுரம் மாவட்ட மீனவ கிராமங் கள், மீனவ மக்கள் சார்பில் தென்னிந்திய மீனவ நலச் சங்கத் தலைவர் கு.பாரதி, ஊரூர் குப்பம் மீனவ கூட்டுறவு சங்கத் தலைவர் கா.சரவணன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2011-ஐ மாற்றி, புதிய கடல் மற்றும் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கையைக் கொண்டுவந்து, மீனவர்களின் வாழ்விடம், வாழ் வாதாரமாக இருக்கும் கடல், கடற்கரை பகுதிகளை சுற்றுலா, வணிகத்துக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது மீனவர்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதிக்கும்.
எனவே, இத்திட்டத்தைக் கைவிடு மாறு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மீனவ கிராமங்கள் சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். இந்த 3 மாவட்டங்களில் மட்டும் 120 மீனவ கிராமங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 5 லட்சம் பேர் வசிக்கின்றனர். மத்திய அரசு கொண்டுவரவுள்ள திருத்தம், கடற் கரை ஒழுங்குமுறை சட்டங்களை வலு விழக்கச் செய்யும்.
இந்த திருத்தத்தின்படி, சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் கடற்கரையில் சுற்றுலா விடுதிகள், கேளிக்கை பூங்காக்கள், நீச்சல் குளம் போன்றவை கட்டப்படும். இதனால் மீனவர் கள் மீன்பிடி வலையை உலர்த்தவும், மீன்களைக் காயவைக்கவும், மீன் விற்கவும் இடம் இருக்காது. கடற்கரை அருகே மீனவர்கள் வசிக்க முடியாது. இதனால் ஒட்டுமொத்த வாழ்விடம், வாழ்வாதாரத்தை மீனவர்கள் இழக்க நேரிடும். இதை நில அபகரிப்பாகவே கருதுகிறோம்.
மீன்பிடித் தொழில், மீனவர்கள் வாழிடம், வாழ்வாதாரத்துக்கு முக்கியத் துவம் வாய்ந்த பொது இடங்கள், கட்டமைப்புகள், மீனவர்களின் நீண்டகால வீட்டு வசதித் திட்டங்கள் ஆகியவை குறித்து புதிய அறிவிக்கையில் குறிப்பிடப் படவில்லை.
இதனால் பல ஆயிரம் ஏக்கர் கடலோர பொது இடங்கள் பாரம்பரிய மீன வர்களிடம் இருந்து பறிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, இத்திட் டத்தைக் கைவிட வலியுறுத்தி மாநில அளவில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் மீனவ மக்களை ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.