தமிழகம்

வேலூர், தி.மலை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் ஏன்?- பின்னணி தகவல்கள்

வ.செந்தில்குமார்

வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராமு மற்றும் தி.மலை வடக்கு மாவட்டச் செயலாளர் முக்கூர் சுப்ரமணியன் நீக்கப் பட்டதின் பரபரப்பு பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிமுக மாவட்டச் செயலாளர் கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று அதிரடியாக மாற்றியுள்ளார். அதன்படி, வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்த ராமு நீக்கப்பட்டு சோளிங்கர் எம்எல்ஏ என்.ஜி.பார்த்தீபன் மீண்டும் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல, திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்ரமணியன் நீக்கப்பட்டு செய்யாறு எம்எல்ஏ தூசி மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வேலூர் கிழக்கு

வேலூர் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் என்.ஜி.பார்த்தீபன் நியமிக்கப் பட்டார். கட்சியினரின் தொடர் புகார் களால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவர் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மாவட்டச் செயலாளர் கூடுதல் பொறுப்பை அமைச்சர் வீரமணி கவனித்து வந்தார்.

பின்னர், புறநகர் மாவட்டம் கலைக்கப்பட்டு, கிழக்கு மாவட் டமாக பிரிக்கப்பட்டது. மேலும், அமைச்சர் கே.சி.வீரமணியின் தீவிர ஆதரவாளரான கொண்டசமுத்திரம் ராமு கிழக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

‘‘தனது கட்டுப்பாட்டில் உள்ள 6 தொகுதிகளின் கட்சி நிர்வாகி களை அனுசரித்துச் செல்வதில் அவருக்கு போதிய அனுபவம் இல்லாதது ராமுவுக்கு பின்னடை வாக இருந்தது. அமைச்சரின் ஆதர வாளர் என்பதால் சட்டப்பேரவைத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் அவர் வேட்பாளராக நிறுத்தப்பட லாம் என கூறப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் எஸ்.ஆர்.கே.அப்பு மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

தேர்தல் நேரத்திலும் ராமு சிறப்பாக செயல்படவில்லை. கே.வி.குப்பம், சோளிங்கர் மற்றும் அரக்கோணம் தொகுதிகளில் அதிமுகவினர் வெற்றிபெற்றனர். ஆனால், இந்த வெற்றியில் ராமுவின் பங்களிப்பு பெரிய அளவில் இல்லை’’ என்று கட்சியினர் புகாராக தெரிவிக்கின்றனர்.

தேர்தல் முடிவுகள் வெளியான ஒரு சில நாட்களில் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து ராமு நீக்கப்படலாம் என்றும், சுமைதாங்கி சி.ஏழுமலை அல்லது என்.ஜி.பார்த்தீபன் ஆகியோரில் ஒருவர் மீண்டும் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படலாம் என்ற தகவல் பரவியது.

தற்போதைய எம்எல்ஏ மற்றும் முன்னாள் மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் மீண்டும் என்.ஜி.பார்த்தீபன் மாவட்டச் செய லாளர் பதவியை பிடித்துள்ளார். விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் என்.ஜி.பார்த்தீபனின் செயல்பாடு கள் இரண்டாவது முறையாக மதிப்பீடு செய்யப்படும் என கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

தி.மலை வடக்கு

திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்ரமணியன் மீது மூத்த கட்சி நிர்வாகிகள் கடுமையான அதிருப்தியில் இருந்தனர். இதனால், சட்டப்பேரவைத் தேர்த லில் அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது.

ஆனால், அவரது தீவிர ஆதரவாளரான சேவூர் ராமச் சந்திரன் ஆரணி தொகுதியில் வெற்றிபெற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரா னார். இதையடுத்து, அவரிடம் இருந்த மாவட்டச் செயலாளர் பதவியும் எந்த நேரத்திலும் பறிக்கப் பட்டு அமைச்சர் சேவூர் ராமச் சந்திரனிடம் வழங்கப்படலாம் என கூறப்பட்டது. தற்போது, செய்யாறு தொகுதி எம்எல்ஏ தூசி மோகன் புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

‘‘தூசி மோகன் கடந்த 2011-ம் ஆண்டு மிகக் குறுகிய காலம் மாவட்டச் செயலாளராக இருந்தார். அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட பதவி, முக்கூர் சுப்ரமணியனுக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைத்தது.

முக்கூர் சுப்ரமணியனிடம் விசுவாசமாக இருந்ததால், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெம்பாக்கம் ஒன்றியத் தலைவர் பதவி மோகனின் மனைவிக்கு தரப்பட்டது. செய்யாறு தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலில் மோகனின் பெயரை பரிந்துரை செய்ததே முக்கூர் சுப்ரமணியன்தான்.

வடக்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு வன்னியரை நியமிக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் தூசி மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் முக்கூர் சுப்ரமணியின் ஆதரவாளர்தான்’’ என ஒருதரப்பினர் தெரிவித்தனர்.

ஆனால், ‘‘தனது பலத்தையும் மீறி செய்யாறு தொகுதியில் நிறுத்தப்பட்ட மோகனை தேர்தலில் வீழ்த்த திமுக, பாமகவுடன் முக்கூர் சுப்ரமணியன் ரகசியமாக கூட்டு வைத்து செயல்பட்டார். அதையும் மீறி மோகன் வெற்றிபெற்றார். முக்கூர் சுப்ரமணியின் தேர்தல் செயல்பாடுகள் முழுவதையும் கட்சித் தலைமைக்கு ஆதாரங்களுடன் மோகன் தரப்பினர் புகாராக அனுப்பினர். அதன் அடிப்படையிலே அவர் நீக்கப்பட்டார். முக்கூர் சுப்ரமணியனுக்கு எதிர்ப்பு காட்டவே மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்’’ என மற்றொரு தரப்பினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT