தமிழகம்

எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே 2 கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: டீசல் கசிந்து கடலில் கலந்ததால் அச்சம்

செய்திப்பிரிவு

எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு அருகே 2 சரக்கு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் இரு கப்பல்களும் சேதமடைந்தன. சரக்கு கப்பலில் இருந்த டீசல் வெளியேறி, கடலில் கலந்தது.

சென்னை துறைமுகத்துக்கு வடக்கே 24 கி.மீ. தொலைவில் எண்ணூர் காமராஜர் துறைமுகம் உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் இது அமைந்துள்ளது. ஈரானில் இருந்து எல்பிஜி எரிவாயு ஏற்றிக் கொண்டு பி.டபிள்யூ. மேப்பிள் என்ற கப்பல் எண்ணூர் துறை முகத்துக்கு வந்தது. இந்த எரிவாயு, லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு அத்திப்பட்டு புதுநகரில் உள்ள எண்ணெய் நிறுவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. எல்பிஜி எரிவாயு இறக்கப்பட்ட பிறகு, துறை முகத்தில் இருந்து அந்தக் கப்பல் நேற்று அதிகாலை 3 மணிக்கு ஈரானுக்குப் புறப்பட்டது.

அப்போது, மும்பையில் இருந்து டீசல் ஏற்றிக்கொண்டு எம்.டி.டான் காஞ்சிபுரம் என்ற கப்பல் எண்ணூர் துறைமுகத்துக்கு வந்துகொண்டிருந்தது. துறை முகத்துக்கு வெளியே ஒரு நாட்டிகல் மைல் தொலைவில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக 2 கப்பல்களும் பயங்கர சத்தத்துடன் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் இரு கப்பல்களும் பலத்த சேதம் அடைந்தன.

விபத்து நடந்ததை அறிந்ததும் இரு கப்பல்களின் மாலுமிகளும் சாதுர்யமாக செயல்பட்டு கப்பல்கள் மேலும் மோதிக்கொள்ளாமல் தடுத்தனர். துறைமுகத்தை ஒட்டியுள்ள பகுதி என்பதால், இரு கப்பல்களும் குறைந்த வேகத்தி லேயே வந்துள்ளன. அதனால், பெரிய அளவிலான சேதம் தவிர்க்கப் பட்டது. கப்பல்களில் இருந்த 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆபத்தின்றி தப்பினர். ஆனால், மும்பை கப்பலின் பாகங்கள் உடைந்ததால், அதில் கொண்டு வரப்பட்ட டேங்கரில் இருந்து டீசல் கசிந்து கடலில் கலந்தது. இதனால், உயிரினங்கள் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்தது.

தகவல் அறிந்த கடலோரக் காவல்படை வீரர்கள், விபத்து நடந்த பகுதிக்கு ஹெலிகாப்டரில் விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். டீசல் கசிவால் சுற்றுச் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாலையில் கடல் பகுதியில் நிலவிய பனிமூட்டமே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT