தமிழகம்

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்க வேண்டும்: மேனகா காந்தி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

ஆள்கடத்தல் (தடுப்பு, மீட்பு மற்றும் மறுவாழ்வு) வரைவு மசோதாவை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தயாரித்துள்ளது. இந்த வரைவு மசோதா தொடர்பான கலந்தாய்வு கூட்டங்கள் டெல்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களி்ல் நடைபெற்றன. இதற்கு அடுத்தகட்டமாக 21 தன்னார்வ அமைப்பினர், தமிழக அரசு அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி பேசும்போது, “குழந்தைகள், பெண்கள் கடத்தலைத் தடுப்பதற்காக கடத்தல் தடுப்பு மசோதா நாடாளுமன்றத்தில் வரும் டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது. அந்த மசோதா சட்டமாக்கப்படும் பட்சத்தில் குழந்தைகள் கடத்தலை வெகுவாகக் குறைக்க முடியும்” என்றார்.

இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை செயலர் லீலா நாயர், துணைச் செயலர் சேத்தன் சங்கி, தமிழக சமூகநலத் துறை செயலர் மணிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்கு பின் அவரைச் சந்தித்த நிருபர்கள், ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதில் உங்களின் நிலை என்ன? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மேனகா காந்தி, “இது போன்று ஒருசிலர் மட்டுமே கூறி வருகின்றனர். தமிழகத்தில் பெரும்பாலானோர் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதிராகத்தான் உள்ளனர். மேலும், ஜல்லிக்கட்டை நடத்த வேண்டாம் என்று நானோ, பாஜகவோ கூறவில்லை. உச்ச நீதிமன்றம்தான் இதற்கு தடை விதித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அனைவரும் மதிக்க வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT