ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வருஷம் சந்திராஷ்டமத்தில் ஆரம்பித்தது தெரியும். வேறு யார் யாருக்கெல்லாம் இது சிக்கல் சிங்காரவேல முகூர்த்தத்தில் உதயமானது என்று ஆராய்ச்சி பண்ணித்தான் பார்க்க வேண்டும்.
மேற்கு ஆப்பிரிக்காவில் நைஜீரியாவுக்கு வடக்கே நைஜர் என்றொரு தேசம். இதே பெயரில் இங்கே ஒரு ஆறு ஓடுவதை மேப்பில் பார்த்தால் தெரியும். ஆனால் இது ஆறு ஓடி வளம் கொழிக்கும் தேசமல்ல. மொத்தப் பரப்பளவில் எண்பது சதவீதத்துக்கும் மேலே பாலைவனம்தான். கடும் வெயில். மிகக் கடும் வெக்கை. மிக மிகக் கடும் கஷ்ட ஜீவனம்.
நாட்டில் எண்பது சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் அடிப்படைக் கல்வியறிவு கிடைக்கப் பெறாதவர்கள். அது பரவாயில்லை ஒழிகிறது என்றால் தொண்ணூறு சத மக்கள் வசிக்கும் பிராந்தியங்களில் மின்சாரம் என்ற ஒன்று என்றைக்குமே இருந்ததில்லை. அவலத்தின் பரிபூரண ருசியைத் தலைமுறைதோறும் அனுபவித்துவரும் அப்பாவி மக்கள் (மெஜாரிடி முஸ்லிம்கள்) அதிகம் வசிக்கும் தேசம்.
பரம தரித்திர தேசமான நைஜரில் இயற்கை வளம் கொஞ்சம் போல் உண்டு. முக்கியமாக அங்கே எடுக்கப்படுகிற யுரேனியம் உலகம் முழுதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. லாபத்துக்குக் குறைச்சல் இல்லை. என்ன ஒன்று, நிலம் நைஜருடையது என்றாலும் யுரேனியம் எடுப்பது பிரெஞ்சு அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவனம். (நைஜர், 1960ம் வருஷம் பிரான்சிடமிருந்து சுதந்தரம் பெற்றது.)
ஒப்பந்த அடிப்படையில் லாபத்தில் உனக்கு இவ்வளவு, எனக்கு இவ்வளவு என்று பேசிவைத்து இத்தனை காலமாகக் கடை நடத்தி வருகிறார்கள். இப்போது அதில்தான் சிக்கல்.
சுரண்டல் இருக்கும் இடத்தில் புரட்சி பிறக்குமல்லவா! நைஜர் மட்டும் எப்படி விலக்காகும்? Niger Movement for Justice என்றொரு புரட்சிகர ஆயுதக் குழு நைஜரில் உதயமானது.
எடுக்கப்படுகிற யுரேனியம் கொடுக்கிற லாபத்தில் நைஜருக்குக் கிடைப்பது ரொம்பக் கம்மி. அள்ளித்தின்னும் பிரெஞ்சு கம்பெனிக்குக் கிள்ளிக் கொடுப்பதில்கூட இத்தனை பிசுனாறித்தனம் கூடாது என்றுதான் இவர்கள் காவியத்துக்குப் பாயிரம் பாடத் தொடங்கினார்கள். மெல்ல மெல்ல இந்தப் போராட்டம் தீவிரமடைந்து இப்போது இது ரணகள வேகத்தைத் தொட்டிருக்கிறது.
நைஜர் மண்ணில் எடுக்கப்படும் யுரேனியத்தின் மொத்த ஏற்றுமதி வருமானம் மட்டும் நைஜருக்கே கிடைக்குமானால் அத்தேசத்தின் தரித்திர நிலைமை பெருமளவு சீரமைக்கப்பட்டுவிடும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் உள்கட்டுமான சௌகரியம் ஏதுமற்ற அரசாங்கம், யுரேனியம் எடுக்கவெல்லாம் வசதியற்று இருக்கிறது.
அது ஒரு பிரச்னையே இல்லை; மற்ற தேசங்கள் செய்யவில்லையா, நமக்கென்ன கேடு என்கிறது புரட்சிக்குழு. நைஜர் அரசாங்கத்துக்கும் பிரெஞ்சு நிறுவனத்துக்கும் எதிராக இந்தக் குழு நடத்தத் தொடங்கி யிருக்கும் அதிரடிகள் அக்கம்பக்கத்து தேசங்களுக்கும் கவலைதர ஆரம்பித்திருக்கிறது. இதுவும் ஓர் உள்நாட்டுப் பெரும் யுத்தமாக மாறிவிடுமோ என்கிற அச்சம் எல்லோருக்குமே வந்திருக்கிறது. ஏனெனில், மேற்படி புரட்சிக்குழுவுக்கு மக்களாதரவு நாளொரு மேனி சேர்ந்தபடிக்கு இருக்கிறது.
நைஜர் பிரான்ஸ் அரசாங்கத்தின் ஆசீர்வாத சௌகரியத்துடன் மட்டுமே இதுகாறும் வாழ்ந்துவந்திருக்கிறது. இந்தப் புரட்சிக்காண்டம் இரு தேசங்களுக்கு இடையில் உள்ள உறவு நிலையை பாதிக்குமானால் அது இப்போதிருக்கும் கொஞ்சநஞ்ச அடிப்படை வசதிகளையும் கபளீகரம் செய்துவிடும் என்று அரசு கவலைப்படுகிறது. பிரச்னையின் அடுத்தக்கட்டம் என்னவாகும் என்று அநேகமாக இன்னும் மூன்று வாரங்களுக்குள் தெரிந்துவிடும்.