தமிழக அரசு ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி யதற்கு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் முகவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் செங்கோட்டுவேல் கூறியதாவது:
தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி யுள்ளது. பசும்பாலின் கொள்முதல் விலையை ரூ.23 ல் இருந்து ரூ.28 ஆகவும், எருமை பாலின் கொள்முதல் விலையை ரூ. 31 ல் இருந்து ரூ.35 ஆகவும் உயர்த்தி வழங்கியதற்கு மிக்க நன்றி. இதனால் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் விவசாயிகள் எண்ணிக்கை வரும் நாட்களில் உயர வாய்ப்புள்ளது..
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். ஏ. பொன்னுசாமி கூறும்போது, “பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தியிருப்பது மகிழ்ச்சியான விஷயம். ஆனால் அதேசமயம் பால் விற்பனை விலையை அதிரடியாக ரூ. 10 உயர்த்தி இருப்பது பொது மக்களுக்கு சுமையாக இருக்கும். படிப்படியாக விலை உயர்த்தி இருந்திருக்கலாம்” என்றார்.