மோடி அரசு மாட்டிறைச்சிக்குத் தடை விதித்திருப்பது பசு மற்றும் காளைகளின் மீதான கருணையினால் அல்ல; மாடுகள் தொடர்பான பெருவணிகம் முழுவதையும் கார்ப்பரேட்மயமாக்கும் வேட்கையினால் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாட்டுக்கறிக்குத் தடை! மாடுகளைக் கறிக்கென விற்கவோ வாங்கவோ கூடாதென புதிய விதிகள்! மாடுகள் உழவுக்குத் தானென்றால், அதற்குத் தேவை அதிகாரிகள் உறுதியளிக்கும் ஆவணங்கள்! மோடி அரசின் வெகுமக்களுக்கு எதிரான இந்தப் போக்கைக் கண்டித்து ஜூன் 2, 2017 வெள்ளிக்கிழமையன்று அனைத்து மாவட்டங்களிலும் நமது கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டம் நமது உணவுக் கலாச்சார உரிமையைப் பாதுகாப்பதற்காக மட்டுமல்ல; நமது அடிப்படையான வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காகவும்தான்!
மாடுகளை வளர்ப்பது, விவசாய உற்பத்தி மற்றும் பால் உற்பத்தி போன்றவற்றுக்காக மட்டுமல்ல; இறைச்சி, தோல், எலும்பு, கொம்பு, குளம்பு போன்ற யாவற்றின் பெருவணிகத்திற்காகவும் தான்!
உழவு மாடுகள் இனி உழவுக்குப் பயன்படாது; கறவை மாடுகள் இனி பால் கறக்காது என்கிற நிலையில், அவை தாமாக இறக்கும் வரையில் வெறுமனே தீனி போட்டு அவற்றைப் பராமரிக்க இயலுமா? காளைகளாக இருந்தாலும் பசுக்களாக இருந்தாலும் அவை உழவுக்கும் கறவைக்கும் பயன்படாதபோது அவற்றை விற்பது-வாங்குவது என கைமாற்றி விடுவதைத் தவிர வேறு வழியில்லை.
மாடுவளர்ப்பு என்பது பல்வகை பயன்பாட்டுக்குரிய ஒரு பெருவணிகத் தொழிலாகும். உள்ளூர்ச் சந்தை, உள்நாட்டுச் சந்தை, மற்றும் வெளிநாட்டுச் சந்தை என இந்த வணிகம் விரிந்து பரந்ததாக உள்ளது. இப்பெரு வணிகம் பரந்துபட்ட உழைக்கும் வெகுமக்களின் தொழிலாக இருப்பதுதான் இன்றைய இந்தச் சிக்கல்களுக்கான அடிப்படையாகும். அதாவது, விவசாயம் சார்ந்த வெகுமக்களின் குடிசைத் தொழிலாக, வீட்டுக்கு வீடு மாடுவளர்ப்பது, விற்பது, வாங்குவது என நடைபெறும் இம்மாட்டு வணிகத்தில் கோடிக் கணக்கான குடும்பத்தினர் நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்கேற்கின்றனர்; பயன்பெறுகின்றனர்!
இதுதான், 'ஏகபோக' முதலாளித்துவச் சக்திகளின் கண்களை உறுத்துவதாகும். இந்த ஏகபோக முதலாளித்துவக் கும்பலின் கண்ணுறுத்தலைச் சரி செய்வதுதான் நமது மோடி அவர்களின் தவிர்க்கமுடியாத கடமையாகவுள்ளது. அதன் விளைவே 'மாட்டிறைச்சிக்குத்தடை' என்னும் புதிய விதிகளாகும். மாறாக, "கோமாதாவைக் காப்போம்" என்பதெல்லாம் இந்துச்சமூகத்தைச் சார்ந்த ஏழை-எளிய அப்பாவி மக்களை ஏய்க்கும் மோசடி முழக்கமாகும்!
தற்போது மோடி கும்பலின் கருணையானது, பசுக்களையும் தாண்டி காளைகள் வரை நீட்சிப் பெற்றுள்ளது. அதாவது, 'பசுக்கறிக்குத் தடை'என்றில்லாமல் பொத்தாம் பொதுவில் 'மாட்டிறைச்சிக்குத்தடை'என அவர்கள் அறிவித்திருப்பதன் மூலம் பசுவதையை மட்டுமல்ல; காளைவதையையும் தடுப்போம் எனக் கூறுவதாக அவர்களின் நிலைப்பாடு மாறியுள்ளது.
இதன் வெளிப்படையான நோக்கம், ஒட்டுமொத்த உழவு மற்றும் கறவை மாடுகளின் மீது இரக்கம் காட்டுவதாக, இந்துக்களின் மதஉணர்வுகளைத் தூண்டி, அரசியல் ஆதாயம் பெறும் வகையில் வாக்குவங்கியை வலுப்படுத்துவதாகும்!
இதன் உள்ளீடான நோக்கம், காலம் காலமாக, வீடு வீடாக நடைபெற்றுவரும் வெகுமக்களின் மாடுவளர்ப்பை மெல்ல மெல்ல முடக்குவதாகும்!
அதாவது, இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ வாங்கவோ கூடாது என்கிறபோது, உழவு மாடு, வண்டிமாடு, கறவைமாடு வளர்ப்போரிடையே உருவாகும் அச்சம் தொடர்ந்து மாடுகளை வளர்ப்பதில் தேக்கத்தை ஏற்படுத்தி, நாளடைவில் அதனை முற்றிலும் முடக்கிவிடும்!
ஏற்கனவே விவசாயம் படிப்படியாக எந்திரமயமாகி வருகிறது. உழுது விதைக்க, அறுத்துப் பதர்நீக்க என அனைத்தும் எந்திரங்களின் ஆக்கிரமிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால், உழவு மாடுகளின் வளர்ப்புக் கணிசமாகக் குறைந்து வருகிறது. தற்போது இறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள இந்தச் சூழலில், மாடு வளர்ப்பு மேலும் முடங்கும்! பின்னர் விவசாயம் முழுமையான எந்திரமயமாதலுக்கு உட்படுத்தப்படும். அதன்மூலம் விவசாயத் தொழிலானது பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோக முதலாளித்துவக் கட்டுப்பாட்டுக்குள் போய்விடும்.
இவ்வாறு, மாடுகள் வளர்ப்பு முடங்கினாலும் இறைச்சிக்கான தேவையை, பால் மற்றும் பால்பொருட்களுக்கான தேவையை எப்படியேனும் ஈடுசெய்தாக வேண்டிய நெருக்கடி உருவாகும். அந்த நெருக்கடியைப் பன்னாட்டு நிறுவனங்கள் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களைக் கொண்டே எதிர்கொள்ள வேண்டிய தேவை எழும். அத்தகைய சூழலில்
'பெரும்பண்ணைகள்' முறையில் இறைச்சி, பால் மற்றும் பால்பொருட்கள் ஆகியவற்றுக்கான மாடுகள் வளர்ப்பை கார்ப்பரேட் நிறுவனங்களே முழுமையாகக் கைப்பற்றிக் கொள்ளும்.
இதனால் காலம் காலமாய் பயன்பெற்று வந்த கோடிக்கணக்கான விவசாயப் பெருங்குடி மக்கள், சிறுவணிகர்கள், இடைத்தரகர்கள், உள்ளூர்-உள்நாட்டு சிறுமுதலாளிகள் போன்றவர்கள் அவ்வணிகத் தளத்திலிருந்து வெளியேற்றப்பட்டுப் பொருளாதார ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
அதாவது, விவசாயம், இறைச்சி, பால், தோல் மற்றும் தீவனம் போன்றவற்றுக்கான மாட்டு வணிகச் சந்தைகளில் புரளும் பொருளாதாரத்தை, வெகுமக்கள் பகிர்ந்து கொண்ட சனநாயாக நடைமுறையை அடியோடு ஒழித்து, ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களே அதனை ஒட்டுமொத்தமாகச் சுரண்டிக் கொழுக்கும்நிலை உருவாகும்.
எனவே, மோடி அரசு மாட்டிறைச்சிக்குத் தடை விதித்திருப்பது பசு மற்றும் காளைகளின் மீதான கருணையினால் அல்ல; மாடுகள் தொடர்பான பெருவணிகம் முழுவதையும் கார்ப்பரேட்மயமாக்கும் வேட்கையினால்!
மோடி அரசின் இந்த வெகுமக்கள் விரோதப் போக்கை அம்பலப்படுத்துவோம்!
மாட்டுவணிகத்தைக் கார்ப்பரேட்மயமாக்கும் தீயமுயற்சியை முறியடிப்போம்!" எனத் தெரிவித்துள்ளார்.