தமிழகம்

சிறுவாணி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை: நீர்மட்டம் மெல்ல மெல்ல உயருகிறது

ர.கிருபாகரன்

சிறுவாணி அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடரும் பருவமழையால் அணையின் நீர்மட்டம் மெல்லமெல்ல உயர்ந்து வருகிறது. இருப்பினும் குறைந்தபட்ச நீர் இருப்பு அளவை எட்டுவதற்கே இன்னும் ஒருவார காலத்துக்கு மழை நீடிக்க வேண்டும் என்கின்றனர் அதிகாரிகள்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழக-கேரள எல்லையோர வனப்பகுதியில் உள்ள சிறுவாணி அணை, கோவை மாவட்டத்தின் முக்கியமான நீராதாரமாக உள்ளது. இந்த அணையில் இருந்து பெறப்படும் நீர், மாநகராட்சியில் 5 வார்டுகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வந்தன. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை குறைந்து வருவதால், அணையில் நீர் தேக்க முடியாத சூழல் நிலவுகிறது.

கடல் மட்டத்தில் இருந்து சிறுவாணி அணை 863.4 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அதற்கு மேல் 15.1 அடி உயரத்துக்கு அதிகபட்சமாக 650 மில்லியன் கனஅடி தண்ணீர் தேக்க முடியும். இதில் இருந்து கோவை மாவட்டத்துக்கு குடிநீர் விநியோகத்துக்காக நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் தொடர்ச்சியான வறட்சி சூழல் காரணமாக இந்த ஆண்டு சிறுவாணி நீர் விநியோகம் படிப்படியாக குறைந்தது. மிகமோசமாக, நீர் உறிஞ்சு குழாய்களுக்கும் கீழாக, இறுதிக்கட்ட நீர் இருப்பு (டெத் ஸ்டோரேஜ்) அளவிலேயே கடந்த 3 மாதங்களாக அணையின் நீர்மட்டம் தொடர்கிறது. இதனால் வழக்கம் போல குடிநீருக்கான நீரை அணையில் இருந்து பெற முடியாத நிலை ஏற்பட்டது.

இருப்பினும் குடிநீர் தேவைக்காக, கேரள அரசின் அனுமதியுடன் அணையின் மற்ற நீர் தேக்கப் பகுதிகளில் இருந்து நீர் உறிஞ்சி கோவைக்கு கொண்டு வரப்படுகிறது. அதாவது வழக்கத்தைவிட 10 மடங்குக்கும் குறைவான அளவாக 8 முதல் 10 மில்லியன் லிட்டர் அளவு நீரே அணையில் இருந்து பெறப்பட்டு வருகிறது. இதனால் சிறுவாணி அணை நீரை நம்பியுள்ள மாநகராட்சி, மாவட்ட உள்ளாட்சிப் பகுதிகள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ளன. பற்றாக்குறையை பில்லூர் குடிநீர்த் திட்டத்தின் மூலம் மாநகராட்சி நிர்வாகம் ஈடுகட்டி வருகிறது.

3 நாட்களாக…

இந்நிலையில், நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை தாமதமாகத் தொடங்கினாலும், அதனால் சிறுவாணி அணைக்கு ஓரளவு நீர் வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்ப கடந்த 3 நாட்களாக கேரள வனப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதிகளான முத்திகுளம், பாம்பாறு, பட்டியாறு ஆகியவற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவும் கணிசமாக கூடியிருப்பதால், விரைவில் ‘டெத் ஸ்டோரேஜ்’ எனும் இறுதிக்கட்ட அளவை நீர்மட்டம் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து பொதுப் பணித்துறையினரிடம் கேட்டபோது, ‘கடந்த 3 நாட்களாக மழை நீடிக்கிறது. அணைப் பகுதியில் நேற்று முன்தினம் 33 மில்லி மீட்டர் மழை பெய்தது. அதேபோல நேற்றும் மழை நீடித்தது. இந்த பருவமழையால் இதுவரை சுமார் 160 மில்லி மீட்டர் மழை இப்பகுதியில் கிடைத்துள்ளது. இதனால் நீர்மட்டம் 859.80 மீட்டர் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. 862 மீட்டரை எட்டும்போதுதான் நீர்மட்டம், உறிஞ்சு குழாய்களை தொடும். இதேபோல, ஒரு வாரத்துக்கு மழை நீடித்தால் அணையில் நீர்மட்டம் சற்று உயர வாய்ப்புள்ளது.

நீர்மட்டம் உயர்ந்தாலும் அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கும் நீரின் அளவு உடனே அதிகரிக்க வாய்ப்பில்லை. அணையின் நீர்மட்டம் குறிப்பிட்ட அளவை எட்டும் வரை 8-10 மில்லியன் லிட்டர் நீர் மட்டுமே விநியோகத்துக்காக எடுக்கப்படும்’ என்றனர்.

SCROLL FOR NEXT