தமிழகத்தில் 50 சதவீதம் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் வருவாய் 25 சதவீதம் குறைந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் 70 சதவீதம் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் 40 சதவீதம் வருவாய் குறைந்துள்ளது.
தமிழகத்தில் 5,672 டாஸ்மாக் கடைகளில் 7 ஆயிரம் மேற்பார்வையாளர்கள், 17 ஆயிரம் விற்பனையாளர்கள், 4 ஆயிரம் உதவி விற்பனையாளர்கள் உட்பட 28 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரமுள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை யோரங்களில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வருகின்றன. அதனால், மாநிலத்தில் 5,672 டாஸ்மாக் கடைகளில் இதுவரை 3 ஆயிரம் கடைகள் மூடப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் 257 டாஸ்மாக் கடைகளில் 160 கடைகள் மூடப்பட்டுள்ளன. சுமார் 70 சதவீதம் கடைகள் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ளதால் டாஸ்மாக் வருமானம் 40 சதவீதம் அதிரடியாகக் குறைந்துள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது:
மாநிலம் முழுவதும் 50 சதவீதம் கடைகள் மூடப்பட்டாலும் 25 சதவீதம் வருவாய் மட்டுமே குறைந்துள்ளது. வழக்கமாக மது பாட்டில்கள் வாங்குவோர் மற்ற கடைகளுக்கு சென்று வாங்குவதால் மற்ற கடைகளில் வருவாய் அதிகரித்துள்ளது. சிலர் நீண்ட நேரம் வரிசையில் நின்றும், குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று வாங்கவும் தயங்குவதால் தமிழக அளவில் மூடப்பட்ட கடைகளால் 25 சதவீதம் வருவாய் குறைந்துள்ளது. இந்த வருவாய் இழப்பு நிரந்தரமில்லை. ஏற்கெனவே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 500 கடைகளையும், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 500 கடைகளையும் மூடியபோதும் வருவாய் குறையவில்லை. மாறாக 8 சதவீதம் வருவாய் அதிகரிக்கத்தான் செய்தது. மூடப்பட்ட கடைகள் மாற்று இடங்களில் திறக்கப்பட்டால் தற்போது குறைந்துள்ள 25 சதவீதம் வருவாய், ஒரு சில வாரங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தற்போது மூடப்பட்ட 50 சதவீதம் கடைகளை மீண்டும் திறக்க அதிகாரிகள் முயற்சி மேற் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்காக அவர்கள், மூடப்பட்ட டாஸ்மாக் கடை சூப்பர்வைசர்கள், மற்ற ஊழியர்கள் மூலம் தேசிய, மாநில நெடுஞ்சாலையில்லாத பிற பகுதிகளில் வாடகைக்கு மாற்று கடைகள் பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பொதுமக்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் போராட்டங்கள் உருவாகியுள்ளன.