தமிழகம்

சேலம் இரும்பாலையை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும்: முத்தரசன்

செய்திப்பிரிவு

சேலம் இரும்பாலையை பாதுகாக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சேலம் மாவட்டத்தில் கிடைத்துவரும் கனிமப் பொருட்களை ஆதாரமாகக் கொண்டு இரும்புத் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்ற நீண்டகாலப் போராட்டத்தில் அமைந்தது சேலம் உருக்காலை. காலம் சென்ற தலைவர்கள் மோகன் குமாரமங்கலம், எம்.கல்யாண சுந்தரம் போன்றோர் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டதன் பேரில் அரசுத் துறையில் அமைக்கப்பட்ட இரும்புத் தொழிற்சாலையாகும்.

சுமார் 3000 தொழிலாளர்கள் பணிபுரியும் இரும்பாலை நிறுவனம் ஆரம்பகாலத்தில் இருந்து லாபகரமாக இயங்கிவருகிறது. மத்தியில் மாறி,மாறி அமையும் காங்கிரஸ், பாஜக ஆட்சிகளின் நவீன தாராளமயக் கொள்கை நடைமுறையால் சேலம் இரும்பாலை செயற்கையாக நஷ்டத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.

இதனைக் காரணம் காட்டி தற்போது தனியாருக்கு சேலம் இரும்பாலையை விற்றுவிட மோடியின் மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இது அனுமதிக்கப்பட்டால் தமிழ்நாட்டின் ரயில் பெட்டி தொழிற்சாலை நெருக்கடிக்கு தள்ளப்படும். இதனைத் தொடந்து பொதுத்துறை சொத்துக்கள் தனியாருக்கு விற்கப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

மக்களின் பொது சொத்தாக விளங்கும் சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்க முயற்சிக்கும் செயலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது. சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்கும் எண்ணத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட்டு அது அரசுத் துறை நிறுவனமாக தொடர்ந்து செயல்படும் என வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் தனிச்சிறப்பான தொழிற்சாலையான சேலம் இரும்பாலையை பாதுகாக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT