பேரவைத் தீர்மானத்துக்கு எதிராக, காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கவுள்ள நிலையில், தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெறுகிறது.
இது தொடர்பான தமிழக அரசின் செய்திக் குறிப்பில், அவசரக் கூட்டத்துக்கான காரணம் குறித்த விவரம் அதில் இடம்பெறவில்லை.
'தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டம் 2013-ஆம் ஆண்டு நவம்பர் 12-ம் நாள் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் நடைபெறும்' என்று அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெறும் காமன்ல்வெத் மாநாட்டை, இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
அது தொடர்பாக, சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், பிரதமர் பங்கேற்காவிட்டாலும், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியக் குழு கலந்துகொள்வது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்தப் போக்குக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கில், தமிழக சட்டமன்றம் நாளை அவசரமாகக் கூட்டப்படுவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டமன்றத் தீர்மானம் விவரம்:
முன்னதாக, இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக சட்டமன்றத்தில் அக்டோபர் 24-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக, தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்த தீர்மானத்தில், 'தமிழக மக்களின் ஒருமித்த கருத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து இந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை நாட்டில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். பெயரளவிற்குக் கூட இந்திய நாட்டின் சார்பாக பிரதிநிதிகள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது.
இது குறித்த இந்தியாவின் முடிவை உடனடியாக இலங்கை நாட்டிற்கு தெரியப்படுத்த வேண்டும். இலங்கை தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களர்களுக்கு இணையாகவும் வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கை நாட்டை தற்காலிகமாக நீக்கி வைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று இந்தியப் பேரரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என்று அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்தத் தீர்மானம், தமிழக சட்டமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுடைய ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியா பங்கேற்பு... பிரதமர் புறக்கணிப்பு
தமிழகத்தின் அழுத்தம் எதிரொலியாக இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்தார். அதே நேரத்தில், வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையிலான இந்தியக் குழு கொழும்புவுக்குச் செல்வது என முடிவெடுக்கப்பட்டது.
இலங்கைத் தலைநகர் கொழும்பில் நவம்பர் 15 முதல் 17 வரை நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில், பிரதமருக்குப் பதிலாக வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பங்கேற்பார். அவரது தலைமையில் கொழும்பு பயணம் செல்லும் இந்தியக் குழுவில், வெளியுறவுத் துறை செயலாளர் சுஜாதா சிங், கூடுதல் செயலாளர்கள் பவண் கபூர், நவ்தேஷ் சர்மா உள்ளிட்டோர் இடம்பெறுவர்.
தமிழக அரசு, அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் அமைச்சர்களின் வலியுறுத்தல்கள் காரணமாக, இலங்கைக்குச் செல்வதில்லை என்று பிரதமர் முடிவெடுத்திருக்கிறார். அதேவேளையில், வெளியுறவுக் கொள்கை மற்றும் தேச நலனின் அடிப்படையில் அம்மாநாட்டில் இந்தியா கலந்துகொள்வது என முடிவு செய்யப்பட்டது.
மத்திய சுற்றுசூழல் அமைச்சர் ஜெயந்தி நடரஜன், மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன், நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி ஆகியோர், காமன்ல்வெத் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கக் கூடாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர்.
தமிழகத்தில் அதிருப்தியால் நாளை முழு அடைப்பு
இந்த மாநாட்டில், பிரதமர் கலந்துகொள்ளவில்லை என்றாலும், இந்தியா பங்கேற்பதால் தமிழகத்தில் அதிருப்தியான சூழல் நிலவுகிறது.
இறுதிகட்ட போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வலியுறுத்தி, பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இதையொட்டி, தமிழகத்தில் நாளை முழு அடைப்பு மற்றும் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதும் அதற்குப் பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.