சொத்துவரி செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டப்படி, 2016-2017ஆம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் 15-ம் தேதிக்குள் செலுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செலுத்தாதவர்கள், செலுத்த தவறியவர்களாக கருதப்படுவர். எனவே சொத்து வரி செலுத்த தவறியவர்கள் உடனடியாக சொத்துவரியை செலுத்தி, மாநகராட்சி முனிசிபல் சட்டப்படி எடுக்கப்படும் ஜப்தி நடவடிக்கையினை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சொத்து வரியை காசோலை, கேட்பு காசோலை வாயிலாக ‘ வருவாய் அலுவலர், சென்னை மாநகராட்சி’ என்ற பெயரில், வரி வசூலிப்பவர்கள் மூலமாக செலுத்தலாம். சென்னை மாநகராட்சியின் >www.chennaicorporation.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் செலுத்தலாம். மேலும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளிலும் செலுத்தலாம்.
சென்னை மாவட்டத்திலுள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்கள், ரிப்பன் மாளிகையில் இயங்கும் இ-சேவை மையம் ஆகியவற்றிலும் செலுத்தலாம்.
மேலும் சொத்துவரி தொடர்பான பொதுமக்களின் கேள்விகள், புகார்கள், பரிந்துரைகளை 1913 என்ற தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம்'' என்று கூறப்பட்டுள்ளது.