தமிழகம்

கிரானைட் முறைகேடு வழக்கில் சிபிஐ-யின் நிலைப்பாடு என்ன?- 4 வாரத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

கிரானைட் முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிஐ தனது நிலைப்பாட்டை 4 வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் அனைத்து துறை நடவடிக்கை குறித்த ஒருங்கிணைந்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கடந்த 2014-ல் தாக்கல் செய்த வழக்கில், ‘மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி, தமிழகத்தில் கனிமவளக் கொள்ளை நடைபெறுவதை தடுக்க வேண்டும். அதற்கு உடந்தையாக செயல்பட்ட மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதியைக் கொண்ட முதன்மை அமர்வு, மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக மட் டும் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை நியமித்தது. அதன்படி, சகாயம் தீவிர விசாரணை நடத்தி, கடந்த நவம்பர் 23-ல் அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதில், ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் அள வுக்கு கிரானைட் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கவும் கோரியிருந்தார். இந்த அறிக்கை தொடர்பாக அரசு எடுத்துள்ள, எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சகாயம் தரப்பு வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன் ஆஜராகி, ‘‘இவ்வளவு பெரிய மோசடி குறித்த வழக்கை சிபிஐ போன்ற அமைப்பு விசாரித்தால்தான் முறையான விசாரணையாக இருக்கும்’’ என்றார்.

அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி, ‘‘இந்த வழக்கில் பல துறைகள் சம்பந்தப்பட்டுள்ளன. 2 துறை அறிக்கை தயாராக உள்ளது. அதை தாக்கல் செய்ய தயாராக உள்ளோம். தொடர்ந்து பிற துறைகளின் அறிக்கைகளை தாக்கல் செய்ய அவகாசம் தேவை’’ என்றார்.

இதையடுத்து, ‘‘தமிழக அரசு அனைத்து துறைகளின் ஒருங் கிணைந்த அறிக்கையை 4 வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு குறித்த தனது நிலைப்பாட்டை சிபிஐ-யும் 4 வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இந்த 2 அறிக்கையும் வந்தபிறகு, வழக்கை யாரிடம் ஒப்படைப்பது என்பது குறித்து நீதிமன்றம் முடிவு எடுக்கும்’’ என தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை ஜூலை 28-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

SCROLL FOR NEXT