தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத்தை திறப்பதில் தவறில்லை என்று மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. இதில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் ஷோபா ஓசா, பொதுச்செயலாளர் நக்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது நிருபர்களிடம் நக்மா கூறியதாவது:
இந்திய அரசியலில் வெற்றிகரமான பெண் தலைவராக திகழ்ந்தவர் ஜெயலலிதா. அவருடைய படத்தை தமிழக சட்டப்பேரவையில் திறப்பதில் தவறில்லை. இருப்பினும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் ஜெயலலிதா படத்தை திறக்கக் கூடாது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் நீதிமன்றம்தான் இறுதி முடிவை எடுக்க வேண்டும்.
இறைச்சிக்காக பசு, காளை, ஒட்டகங் களை விற்க மத்திய அரசு தடை விதித் துள்ளது. இது கடும் கண்டனத்துக்குரிய செயல். முஸ்லிம்களைவிட இந்துக்களே அதிகம் மாட்டு இறைச்சி உண்கின்றனர். மக்கள் எதை சாப்பிட வேண்டும் என்பதை அரசு தீர்மானிக்கக் கூடாது. அது மக்களின் தனிப்பட்ட உரிமை.
தமிழகத்தில் மதுக்கடைகளுக்கு எதிராக போராடும் பெண்கள் மீது தாக்கு தல் நடத்துவது முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும். அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட வேண்டும். ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து அவர்தான் முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு நக்மா கூறினார்.
முன்னதாக ஷோபா ஓசா கூறும்போது, ‘‘கடந்த 3 ஆண்டு மோடி ஆட்சியில் இந்தியாவுக்கு பேரழிவு ஏற்பட்டுவிட்டது. பசு பாதுகாவலர்கள், இந்து யுவ வாஹினி, பஜ்ரங்தள் போன்ற அமைப்பு கள் தலித், முஸ்லிம் சமூகத்தினர் மீது கொடூர தாக்குதல்களை நடத்தி வருகின் றனர். பாஜக ஆட்சியில் சாதி, மதக் கலவரங்கள் அதிகரித்துள்ளன. சிறு பான்மையினர், பெண்கள் மீதான வன் முறையும் அதிகரித்துள்ளது’’ என்றார்.