தமிழகம்

ஆன்லைன் வர்த்தகத்தில் வரி செலுத்தாமல் மோசடி: நடவடிக்கை பாயும் என அரசு எச்சரிக்கை

செய்திப்பிரிவு

ஆன் லைன் வணிகத்தில் பொருட்கள் விற்கும் போது, மதிப்புக் கூட்டு வரியை செலுத்தாமல் மோசடி செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு வணிக வரிகள் துறை முதன்மை செயலாளரும், வணிக வரித்துறை ஆணையருமான கே.ராஜாராமன் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:

ஆன்லைன் மூலமாக இ-வர்த்தகம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. அதேநேரம் ஆன் லைன் வணிகம் மூலம் வர்த்தகம் செய்வோர் பலர், அரசுக்கு சேர வேண்டிய மதிப்புக் கூட்டு வரியை (வாட்) செலுத்தாமல், மோசடி செய்வது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து சில நிறுவனங்கள் மீது விசாரணை நடந்து வருகிறது. எனவே, ஆன்லைன் வர்த்தகர்கள் தங்கள் வர்த்தகக் கணக்கின் படி, அரசுக்கு சேர வேண்டிய வாட் வரியை தவறாமல் செலுத்த வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி சட்டம் 2006, பிரிவு 71ன் படி சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்திலிருந்து ஆன் லைனில் பொருட்கள் விற்பனை, மென்பொருள், மின்னணு புத்தகம் மற்றும் பாடல்கள் பதிவிறக்கம் (டவுன்லோட்) போன்றவற்றுக்கும், அதை விற்போர், அரசுக்கு வாட் வரி செலுத்த வேண்டும்.

அதேநேரம் தமிழகத்திலிருந்து வெளிமாநிலத்தினருக்கு விற்றால் மத்திய விற்பனை வரி செலுத்த வேண்டும்.

தமிழகத்திலிருந்தோ அல்லது வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தோ, தமிழக வாடிக்கையாளருக்கு மோட்டார் வாகனங்கள் விற்றால், அதன் விற்பனையாளர்கள் தமிழக அரசுக்கு நுழைவு வரி செலுத்த வேண்டும்.

எனவே வர்த்தகர்கள் அரசின் இ போர்ட்டல் மூலம், முறையாக மோசடியின்றி வாட் வரிகளை செலுத்தாவிட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்களும் பொருட்களை வாங்கும் போது, உரிய வரிகள் கட்டப்பட்டதை உறுதி செய்யும் வகையில் ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். மீறுவோர் குறித்து, சென்னை எழிலகத்திலுள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் புகார் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT