தமிழகம்

தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு கோவை இளைஞர்கள் விழிப்புணர்வு பயணம்

செய்திப்பிரிவு

தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு மோட்டார் சைக்கிளில் செல்லும் கோவை இளைஞர்கள் 4 பேர் பயணத்தைத் தொடங்கினர்.

கோவையைச் சேர்ந்த கார்த்திக் (25), சந்தீப் ராஜன் (31), கவிசன் (24), ஸ்டீபன் அஜய் (29) ஆகியோர் இந்தப் பயணத்தை மேற்கொள்கின்றனர். கோவையில் நேற்று பயணத்தைத் தொடங்கிய அவர்கள், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தண்ணீர் சேமிப்பு, நீர்மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி 45 நாட்கள் பயணம் மேற்கொள்கிறோம். கோவையில் இருந்து கன்னியாகுமரி சென்று, அங்கிருந்து பயணத்தைத் தொடங்குகிறோம். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், டெல்லி, ஜம்மு-காஷ்மீர் மாநிலங்கள் வழியாக லடாக்கை அடைகிறோம். மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா வழியாக கோவை திரும்புகிறோம்.

சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்யும் நாங்கள், வழியில் உள்ள மக்களைச் சந்தித்தும், கல்வி நிறுவனங்கள், சுகாதார நிலையங்களிலும் துண்டுப் பிரசுரம் வழங்கியும், போஸ்டர்கள் வைத்தும், மரக்கன்றுகள் நட்டுவைத்தும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறோம்.

அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் வீரர்கள் உதவியுடன், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல், குளங்களைத் தூர் வாருதல், தண்ணீர் சேமிப்பு முறைகள் குறித்துப் பிரச்சாரம் செய்ய உள்ளோம். தினமும் 350 முதல் 400 கிலோமீட்டர் வரை பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

SCROLL FOR NEXT