மதுரையில் குரங்கு வேடமிட்ட வர்களுக்கு இந்து இளைஞர் பேரவையினர் திருமணம் செய்து வைத்து காதலர் தினத்துக்கு நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
காதலர் தினம் என்ற பெயரில் பொது இடங்களில் நடக்கும் அத்துமீறல்கள் தமிழக பாரம்பரியத்துக்கும், கலாச்சாரத்துக்கும் எதிராக உள்ளதாக இந்து இளைஞர் பேரவை எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இப்பேரவை நிர்வாகிகள் காதலர் தினமான நேற்று பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில், காதலர்கள் என்ற போர்வையில் அத்துமீறி யாரும் நடந்து கொள்கின்றனரா என கண்காணித்தனர். இந்து இளைஞர் பேரவை மதுரை நகர் தலைவர் அசோக்குமார், பொதுச் செயலாளர் மணிமுத்து, மாநில அமைப்பாளர் பார்த்தசாரதி ஆகியோர் நகரின் முக்கிய பகுதிகளில் மிருகங்களின் முகமூடி அணிந்து வலம் வந்தனர்.
பின்னர், குரங்கு வேடமிட்ட இருவருக்கு திருமணம் செய்து வைத்து தங்கள் எதிர்ப்பை காட்டினர். இதுகுறித்து அசே ாக்குமார் கூறுகையில், ‘காதலர் தினம் கொண்டாடுவது வெளிநாட்டு கலாச்சாரம். லவ் ஜிகாத் என்ற பெயரில் ஆண்டுக்கு 6 ஆயிரம் பெண்கள் இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதற்கு மூல காரணம் காதலே. காதலர் தினத்தை பயன்படுத்தி பலரும் காதல் நாடகத்தை நடத்தி வருகின்றனர். பொது இடங்களில் காதலர்கள் என்ற போர்வையில் அத்துமீறுவோருக்கு உரிய பாடம் புகட்ட, குரங்கு வேடமிட்டவர்களுக்கு திருமணம் செய்துவைத்தோம். பொது இடங்களில் காதலர்கள்போல் சுற்றித்திரிந்த பலரை எச்சரித்து அனுப்பினோம் என்றார்.