# திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா மாலை 5 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிற்பகல் 3 மணி முதல் ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.
# கருணாநிதியிடம் 50 ஆண்டுகளாக உதவியாளராக பணியாற்றிவரும் சண்முகநாதன், ராஜமாணிக்கம் ஆகியோருக்கு விழாவில் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார்.
# விழாவில் வாழ்த்திப் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை குழுத் தலைவர் டெரிக் ஓ.பிரையன் தனது பேச்சை தமிழில் தொடங்கி, தமிழிலேயே முடித்தார். அப்போது தொண்டர்கள் கரவொலி எழுப்பினர்.
# விழாவில் பேசிய புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீன் ஆகியோர் கருணாநிதிக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
# திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வாழ்த்திப் பேசும்போது இருமல் வந்ததால் சிரமப்பட்டார். அப்போது அவருக்கு தண்ணீர் கொடுக்க கனிமொழி முயன்றுகொண்டிருந்தார்.இதற்கிடையே அருகில் இருந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலினிடம் தண்ணீர் பாட்டிலை கொடுத்து அன்பழகனிடம் அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த செயலை பார்த்த தொண்டர்கள் கைதட்டி ஆராவாரம் செய்தனர்.
# விழா நிகழ்ச்சிகளை காண ஆங்காங்கே டிஜிட்டல் திரைகள் வைக்கப்பட்டிருந்தன. விழாவில் ஸ்டாலின் பேசும்போது, கருணாநிதியின் பெயரை குறிப்பிடும்போதெல்லாம் உற்சாக மிகுதியில் தொண்டர்கள் குரல் எழுப்பினர்.
# மு.க.ஸ்டாலினின் பேச்சை ராகுல்காந்தி கூர்ந்து கவனித்து வந்தார். மத்திய அரசு குறித்து அவர் பேசும்போதெல்லாம் திருநாவுக்கரசர் அதை மொழியெயர்த்து அவரிடம் கூறி வந்தார்.