மைசூரு மத்திய சிறையில் இருந்த வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 18 ஆண்டுகளாக சிறையில் இருந்த அவர்களின் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்வதாக கர்நாடக அரசு உத்தரவில் கூறியுள்ளது.
சந்தன மரக் கடத்தலில் ஈடுபட்ட வீரப்பனை கைது செய்வதில் தீவிரம் காட்டிய கர்நாடக போலீஸார், வீரப்பன் கூட்டாளிகள் என்று சந்தேகப்பட்டவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் பல பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக மைசூரு மத்திய சிறை யில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில், 70-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கர்நாடக சிறைகளில் உள்ள கைதிகளின் நன்னடத்தையின் காரண மாக 52 கைதிகளை கர்நாடக அரசு நேற்று விடுதலை செய்தது. அவர்களில் 4 பேர் வீரப்பன் கூட்டாளிகள். அன்புராஜ், சித்தன், அப்புசாமி, தங்கராஜ் ஆகிய நான்கு பேரும் கடந்த 18 வருடங்களுக்கும் மேலாக மைசூரு சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்தனர். வீரப் பன் இறப்பதற்கு முன்பாகவே இந்த 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் சாம்ராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகால் தாலுகா, மாதேஸ்வரன் மலைப்பகுதியைச் சுற்றியுள்ள ராமபுரா, கவுதள்ளி, மார்த்தள்ளி, கோபிநத்தம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள்.