தேசியக் கொடி அவமதிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
ஆர்.கே.நகரில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சியினர் சவப்பெட்டியில் ஜெயலலிதா உருவ பொம்மை மீது போர்த்தப்பட்ட தேசியக் கொடியுடன் கடந்த 6-ம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் பார்வையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து தேசியக் கொடி அகற்றப்பட்டது.
தொண்டர்கள் ஆர்வ மிகுதியில் சவப்பெட்டி பொம்மை மீது தேசியக் கோடியை வைத்ததாக, பிரச்சாரத்தில் ஈடுபட்ட மாஃபா பாண்டியராஜன் கூறினார். இந்நிலையில் தேசியக் கொடியை அவமதித்ததாக மாஃபா பாண்டியராஜன், ஓபிஎஸ் அணி பேச்சாளர் அழகு தமிழ்ச்செல்வி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
காவல்துறையினரின் கைது நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக மாஃபா பாண்டியராஜன் தரப்பில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறிய மாஃபா பாண்டியராஜன், ''என் மீது தேசியக் கொடி அவமதிப்பு வழக்கு போடப்பட்டது அரசியல் உள்நோக்கம் கொண்டது'' என்றார்.