மக்கள் நல கூட்டியக்கத்தில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னை மாநகரில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு காவல்துறையே முழு காரண மாகும். 10 ஆயிரத்துக்கும் அதிக மாக குவிக்கப்பட்ட காவல் துறையினர் மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றத் தொடங்கினர். விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பதற்கு இதுவே காரணமாகும். மாணவர்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி விட்டதாகவும், வன் முறைச் சம்பவங்களுக்கும் சமூக விரோதிகளே காரணம் எனவும் சென்னை மாநகர காவல் ஆணையர் கூறியிருப்பதை ஏற்க முடியாது. உண்மையை மூடி மறைக்கவும், பிரச்சினையை திசை திருப்பவும் அவர் இவ்வாறு பேசியிருக்கிறார்.
சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் காவல் துறை யினர் மாணவர்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் மீது தாக்கு தல் நடத்தியுள்ளனர்.
காவல் துறையினரே வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டுக் காக அவசரச் சட்டம் கொண்டுவர மாணவர்களின் போராட்டமே காரணமாகும்.
மாணவர்கள் மீதான காவல் துறையினரின் தாக்குதலைக் கண்டித்து வரும் 28-ம் தேதி சென்னையில் ஜி.ராமகிருஷ்ணன், மதுரையில் இரா.முத்தரசன், கோவையில் திருமாவளவன் ஆகி யோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.