வடகிழக்குப் பருவமழை பாதிப்புகள் குறித்து கட்டுப்பாட்டு மையத்தின் தொலைபேசி எண்ணான, 1070, 1077 ஆகியவற்றுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர், கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:
வட கிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தயார் நிலை குறித்து, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் ஆய்வு மேற்கொண்டார். இதில், மாநில நிவாரண ஆணையர் ஸ்ரீதர், வருவாய்த் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிப்பு இணை ஆணையர் லில்லி, சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி ஆகியோர் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
பருவ மழை தொடர்பாக மாநில மற்றும் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களை முறையாக செயல்படுத்தி, அவற்றின் செயல்பாடுகளை கண்காணிக்க, அமைச்சர் அறிவுரை வழங்கினார்.
பருவ மழை தொடர்பாக, பொதுமக்கள் தங்களின் புகார்களை, மாநில அளவில், மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1070, மாவட்ட அளவிலான அவசரக் கட்டுப்பாட்டு மையம் 1077 ஆகியவற்றில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.