போலி நிறுவனங்கள் மூலம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக சென்னையை சேர்ந்த நபரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
2016-ம் ஆண்டு நவம்பரில் பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டது. பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பின்னர் போலியான நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு பல ஆயிரம் கோடி ரூபாய் வெளிநாடுகளுக்கு பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த ஆதாரங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இதுகுறித்த ஆதாரங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 1-ம் தேதி இந்தியா முழுவதும் 100 நகரங்களில் சுமார் 300 இடங்களில் சோதனை நடத்தினர். சென்னையில் மட்டும் 12 போலி நிறுவனங்களை உருவாக்கி பணப்பரிமாற்றம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதில் சென்னை மணலியில் ‘கேலக்ஸி இம்பேக்ஸ்’ என்ற பெயரில் இறக்குமதி நிறுவனத்தை போலியாக உருவாக்கி, அதன் மூலம் வெளிநாடுகளுக்கு பல கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் போலி நிறுவனத்தை உருவாக்கிய லியாகத் அலி என்பவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். மேலும், அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.20 கோடியையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர்.