சட்டப்பேரவையில் மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், அதிமுக-திமுகவுக்கு இடையே நடக்கும் போர்க்களமாக மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சியைச் சேர்ந்த திமுகவினரை அவைக் காவலர்களை வைத்து கூண்டோடு வெளியேற்றியும், ஒரு வார காலத்துக்கு அவர்களை சஸ்பெண்ட் செய்தும் அறிவிக்கப்படுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் தினந்தோறும் மக்கள் பிரச்சினைகளையும், தொகுதி பிரச்சினைகளையும் தேமுதிக பேச முற்பட்டபோதெல்லாம் இதுபோன்ற முறையற்ற நிகழ்வுகளையே அதிமுக அரசு அரங்கேற்றியது. அவையில் எதிர்கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களை முற்றிலும் செயல்படவிடாமல் தடுத்து, அரசுக்கு எதிராக யாரும் பேசிவிடக்கூடாது என்ற ஒரே எண்ணத்தில் தேமுதிக உறுப்பினர்களின் மைக்குகளை செயல்படவிடாமல் செய்வதும், அவைக் காவலர்களை வைத்து வெளியேற்றுவதும் நீண்ட நாட்களுக்கு சஸ்பெண்ட செய்வதும் என்று சட்டப்பேரவை மரபுகளை கேள்விக்குறியாக்கும் அளவுக்கு செயல்பட்டனர்.
நியாயத்தை கேட்ட தேமுதிகவினரின் உண்மை நிலையை மக்களிடம் கொண்டுசெல்லவிடாமல் பல்வேறு வகையிலும் தடுத்தனர். அதனால்தான் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது அவசியம் என்று வலியுறுத்தி பலமுறை அரசிடம் கேட்டும் பலனில்லாமல்போனது.
மேலும், நேரடி ஒளிபரப்பு செய்ய பல கோடி ரூபாய் செலவாகும் என்று சாக்கு போக்கு சொல்லி நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை. தேமுதிக கடந்த 5 ஆண்டுகள் பட்ட கஷ்டத்தின் தொடக்கமாக திமுகவின் தற்போதைய நிகழ்வு ஏற்பட்டுள்ளது. திமுக, அதிமுக இருவரும் மாறி மாறி இதுபோன்ற நிகழ்வுகளை ஏற்படுத்தி தமிழக சட்டப்பேரவையின் கலாசாரத்தை மாற்றிவிட்டார்கள்.
மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் சட்டப்பேரவையில் மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே நடக்கும் போர்க்களமாக மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக புதிய ஆட்சி வரும்போதுதான் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.