தமிழகம்

தூசிபடியும் திருமலை நாயக்கர் அரண்மனை: துப்புரவு பணியாளர் பற்றாக்குறையால் அவலம்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரையின் பிரதான சுற்றுலாத் தலமான திருமலை நாயக்கர் அரண்மனையில் துப்புரவு பணியாளர் பற்றாக்குறையால் சமீப காலமாக புறா எச்சம், தூசு மயமாகி சுகாதாரமில்லாமல் காணப்படுவதால் சுற்றுலா எழில் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருமலைநாயக்கர் அரண்மனை, தென்னிந்தியாவில் எஞ்சியுள்ள பண்டைய அரண் மனைகளில் மிகவும் எழில் வாய்ந்ததும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடியதுமாக இருக்கிறது. திருமலை நாயக்கர் கட்டியபோது இருந்த அரண்மனை, தற்போது எஞ்சியள்ள கட்டிடத்தைக் காட் டிலும் 4 மடங்கு பெரியதாக இருந்தது. இங்கு சொர்க்க விலாசம், ரங்க விலாசம், பதினெட்டு வித இசைக்கருவிகள் இசைக்கும் இடம், பல்லக்கு வைக்கும் இடம், படைக்கலன் வைக்கும் இடம், பூஜை செய்யும் இடம், அரியணை மண்டபம், அந்தப்புரம், நாடக சாலை உள்ளிட்ட இடங்கள் இருந்தன.

தற்போது எஞ்சி உள்ள பகுதி சொர்க்க விலாசம் மட்டுமே. கிபி 1857-ம் ஆண்டிலேயே இப்போது எஞ்சியுள்ள சொர்க்கவிலாசத்தின் பல பகுதிகள் விரிசல் கண்டி ருந்தன. கிபி. 1858-ல் பெய்த கடும் மழையில் மேற்கு பகுதியில் ஒரு சுவர் வீழ்ந்தது. பல பகுதிகள் சேதம் அடைந்தன. 1868-ல் மதுரை வந்த சென்னை கவர்னர் லார்டு நேப்பியர் இந்த அரண்மனையின் அழகை கண்டு வியந்து, உடனடி யாக பாதுகாக்க ஏற்பாடு செய் தார். 1872-ம் ஆண்டிலேயே ரூ.2 லட்சத்தில் இடிந்த இந்த அரண்மனை பகுதிகள் பழுது நீக்கப்பட்டன. தற்போது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அரண்மனையை பராமரித்து வருகிறது.

காலை 10 மணி முதல் 5 மணி வரை தொல்லியல்துறை கட்டுப்பாட்டிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரை சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டிலும் அரண்மனை செயல்படுகிறது. அரண்மனையை பராமரிக்க, சுற்றுலாத்துறை சார்பில் 2 துப்புரவு பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களால், தினமும் வளாகத்தில் விழும் புறா எச்சம், தூசி, குப்பைகளை மட்டுமே அள்ள முடிகிறது. இவர்களால் முழுமையாக அரண்மனையை பராமரிக்க முடியவில்லை.

அதனால், அரண்மனை மேற் கூரை, வளாகம், தூண்கள், சுவர்களில் தூசு படிந்தும், புறா எச்சமுமாக இருக்கிறது. அதனால், சுற்றுலாப் பயணிகள், தூசி படிந்த, புறா எச்சமான அரண்மனை வளாகம், படிக்கட்டுகளில் அமர்ந்து அரண்மனையின் கட்டிடக்கலை, பிரம்மாண்ட தூண்கள், ஓவியங்களை ரசித்து பார்க்க முடியவில்லை. குழந்தைகள், பெரியவர்களுக்கு, தூசியால் அலர்ஜி, மூச்சு திணறல் ஏற்படுகிறது.

தூசி படிந்த தரையில் அமர்ந்து அரண்மனையை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள். (வலது) அரண்மனை மேற்கூரையில் அமர்ந்துள்ள புறாக்கள் கூட்டம்

புறா எச்சத்தால் பாழாகும் மாடங்கள்

தொல்லியல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, தற்போது அரண்மனை 4 1/2 ஏக்கரில் அமைந்துள்ளது. 248 தூண்கள், 8 அறைகள் உள்ளன. மொத்த அரண்மனையையும் பராமரிக்க 2 துப்புரவு பணியாளர்களே உள்ளனர். இவர்களால் தூண்கள், அறைகள், மேற்கூரைகளில் படியும் தூசியை தினமும் சுத்தப்படுத்த முடியவில்லை. இந்த அரண்மனை உயரமான கட்டிடங்களுடன் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதால் புறாக்கள் வருகை அதிகமாக இருக்கிறது. அவற்றின் எச்சம்தான், பெரும் தலைவலியாக இருக்கிறது. மின் விளக்குகள் மீது எச்சம்விழுவதால் வெளிச்சம் தெரியாமல் பழுதும் அடைகிறது, என்றனர்.

SCROLL FOR NEXT