தமிழகம்

வசந்திதேவி, ஞாநி உட்பட 6 பேருக்கு விசிக விருது

செய்திப்பிரிவு

அம்பேத்கரின் 125-வது பிறந்த நாள் ஆண்டு விழாவை முன்னிட்டு முனைவர் வசந்தி தேவி, பத்திகையாளர் ஞாநி உட்பட 6 பேருக்கு விசிக சார்பில் விருதுகள் வழங்கப்படவுள்ளது என்று அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதியன்று ஒவ்வொரு ஆண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தகுதிவாய்ந்த சான்றோர்களுக்கு அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், காயிதேமில்லத் பிறை, அயோத்திதாசர் ஆதவன், செம்மொழி ஞாயிறு என்ற பெயர்களில் 6 விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஏப்ரல் 14 அன்றே நடந்திருக்க வேண்டிய இந்த விழா தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் காரணத்தால் தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி இந்த விருதுகள் வழங்கும் விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் வரும் ஜூன் 21 அன்று மாலை 6 மணிக்கு நடக்கவுள்ளது.

அம்பேத்கரின் 125-வது பிறந்த ஆண்டான 2016-ம் ஆண்டுக்கான விருதுகளைப் பெறுவோரின் விவரம் பின்வருமாறு:

அம்பேத்கர் சுடர் விருது நீதிபதி கே.சந்துருவுக்கும், பெரியார் ஒளி விருது முனைவர் வே.வசந்திதேவிக்கும், காமராசர் கதிர் விருது எல்.இளையபெருமாளுக்கும் (மறைவுக்குப் பின்), அயோத்திதாசர் ஆதவன் விருது பத்திரிகையாளர் ஞாநிக்கும், காயிதேமில்லத் பிறை விருது நாகூர் ஹனிஃபாவுக்கும், செம்மொழி ஞாயிறு விருது கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கும் வழங்கப்படவுள்ளது. இந்த விருது ஒவ்வொன்றும் பட்டயமும், ரூ.50 ஆயிரம் ரூபாய் பொற்கிழியும் கொண்டதாகும்'' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT