தமிழகம்

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஒருநாள் சம்பளமாக ரூ.900 கேட்கின்றனர்: மனிதவளத்துறை பொது மேலாளர் தகவல்

செய்திப்பிரிவு

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டே ஊதிய உயர்வுக்கு வழி வகுத்துள்ளோம் என்று என்எல்சி மனிதவளத்துறை பொதுமேலாளர் என்.பாலாஜி தெரிவித்தார்.

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் நேற்று என்எல்சி பயிற்சி வளாகத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் நிர்வாகத்துறை அதிகாரிகள் இடையேயான சமரச பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இதில் உடன்பாடு எதுவும் ஏற்படாததால் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தை சென்னையில் மண்டல தொழிலா ளர் நல ஆணையர் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை விபரம் குறித்து நிறுவன மனிதவளத் துறை பொதுமேலாளர் என்.பாலாஜி கூறும்போது: கடந்த 33 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பலக்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையை நிர்வாகம் மிகுந்த கவனத்துடனும், பொறுப்புணர் வுடனும் அணுகுகிறது.

என்எல்சி ஒப்பந்தத் தொழிலா ளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்ற பொதுத்துறை நிறுவனங்களில் வழங்கப்படுவது இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மேலும் அவர்களின் வாழ் வாதாரத்தைக் கருத்தில் கொண்டே நிர்வாகம் ஊதிய உயர்வுக்கு வழி வகுத்து தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ஊதியத்தை தொகுப்பூதிய அடிப்படையில் கணக்கிட்டு வழங்குவது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறோம். இருப்பினும் தொழிற் சங்க நிர்வாகிகள் நாளொன்றுக்கு ரூ.900 வழங்கவேண்டும் என வலியுறுத்துகின்றனர். நிர்வாகத் தரப்பிலோ மாதம் ரூ.11 ஆயிரத்து 600 முதல் 12 ஆயிரத்து 500 வரை வழங்க முன்வந்துள்ளோம். இதனால் பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் உள்ளது.

தொழிலாளர்கள் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டு, வழக்கம் போல் பணிக்குத் திரும்பவேண்டும் என்பது எங்களின் வேண்டுகோள். மின் உற்பத்தியை பொறுத்தமட்டில் எந்தவித பாதிப்பும் இல்லை என்றார் பாலாஜி.

அதிமுக தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ரங்கராமானுஜம் கூறும்போது: பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை. எனவே வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என்றார்.

SCROLL FOR NEXT