வியாபாரியிடம் போலீஸ் எனக் கூறி காரில் கடத்தி ரூ.7 லட்சம் மதிப்புள்ள வெள்ளிக் கட்டிகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
சேலம் மாவட்டம் கொண்டலாம் பட்டி பகுதியை சேர்ந்தவர் சீனி வாசன் (48). வெள்ளி வியாபாரி. இவர் நேற்று முன்தினம் காலையில் பழைய வெள்ளி பொருட்களுடன் சென்னை சவுகார் பேட்டைக்கு வந்தார். இங்கு வெள்ளி பொருட்களை உருக்கி சுத்தப்படுத்தி 17 கிலோ வெள்ளிக் கட்டிகளாக மாற்றினார். பின்னர் சேலம் செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்துக்கு சென்றார். கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே நடந்து சென்ற போது, 2 பேர் விரைந்து வந்து தங்களை போலீஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அவர் வைத்திருந்த பையை சோதனை செய்துள்ளனர். வெள்ளி கட்டிகள் இருப்பதை பார்த்ததும், காவல் நிலையம் வாருங்கள் என்று அங்கிருந்த காருக்குள் ஏற்றி அழைத்து சென்றுள்ளனர். காரில் ஏற்கெனவே 2 பேர் இருக்க, அனைவரும் சேர்ந்து சீனி வாசனை அசையவிடாமல் பிடித் துக்கொண்டனர்.
கார் மாதவரம் பகுதியை நோக்கி சென்றது. வழியில் சீனி வாசனை அடித்து உதைத்து அவரை காரிலிருந்து கீழே தள்ளி விட்டு, வெள்ளிக் கட்டிகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இது குறித்து கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலை யத்தில் சீனிவாசன் புகார் அளித் தார். புகாரின்பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீனிவாசனை பற்றி நன்றாக அறிந்தவர்களே இந்த கொள்ளை யில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். இதனால் அவரது நிறுவன ஊழியர்கள் மற்றும் சென்னையில் வெள்ளியை உருக்கிய இடத்தில் இருந்த நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.