தீபாவளியை முன்னிட்டு பண்டிகை முன்பணம் மற்றும் போனஸ் வழங்கக் கோரி போக்குவரத்துக் கழக தொழிற் சங்கங்கள் சார்பில் 10-ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து சங்கங்களின் கூட்டம், மாநகர் போக்குவரத்துக் கழக தொமுச அலுவலகத்தில் நடந்தது. இதில் தொமுச பேரவை, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், டிடிஎஸ்எப், பிஎம்எஸ், டிஎம்டிஎஸ்பி., பிடிஎஸ், எம்எல்எப் மற்றும் ஏஏஎல்எப் ஆகிய சங்கங்கள் கலந்துகொண்டன.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், வழக்கமாக ஒரு மாதத்துக்கு முன்பாக வழங்கப்படும் பண்டிகை முன் பணம் இதுவரை வழங்கவில்லை. போனஸ் வழங்குவது சம்பந்தமாக அரசு மற்றும் நிர்வாகங்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
எனவே, அரசு மற்றும் போக்குவரத்துக் கழக நிர்வாகங்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 10-ம் தேதி அரசு போக்குவரத்துக் கழகங்களின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து பணிமனைகள் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்வது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு அந்த கூட்டறிக் கையில் கூறப்பட்டுள்ளது.