தமிழகம்

ராமேஸ்வரம்: 2014 பிப்ரவரியில் பாம்பன் ரயில் பால நூற்றாண்டு விழா

செய்திப்பிரிவு

பாம்பன் ரயில் பாலம் நூற்றாண்டு விழா 2014 பிப்ரவரி 24-ம் தேதி மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க உள்ளதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்தார்.

பாம்பன் கடல் மீது பாலம் கட்டப்பட்டு 1914-ல் தனுஸ்கோடிக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா புதன்கிழமை தனுஸ்கோடி, ராமேஸ்வரம், பாம்பன் பாலம், மண்டபம் பகுதிகளுக்குச் சென்று ஆய்வு நடத்தினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

பாம்பன் ரயில் பால நூற்றாண்டு விழாவுக்கு, அப்பாலத்தை அகல பாதையாக மாற்ற முக்கியக் காரணமாக இருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமும், 1964-ல் தனுஸ்கோடியை தாக்கிய புயலில் சேதமடைந்த பாம்பன் ரயில் பாலத்தை சிறப்பாக மறு சீரமைத்துக் கொடுத்த பொறியாளர் ஸ்ரீதரனும் முக்கிய விருந்தினர்களாகப் பங்கேற்க உள்ளனர்.

அத்தருணத்தில் பாம்பன் பாலத்தில் ரயிலில் பயணிக்க வேண்டும் என அப்துல்கலாமும் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். எனவே, விழா அன்று மண்டபத்தில் இருந்து பாம்பனுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பாம்பனில் நூற்றாண்டு நினைவுத் தூணின் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெறும்.

சென்னை ஐ.ஐ.டி. பொறியாளர் குழுவினர் சமீபத்தில் பாம்பன் ரயில் பாலத்தை ஆய்வு செய்தனர். அந்த அறிக்கை தாக்கல் செய்த பிறகுதான், புதிதாக பாம்பன் ரயில் பாலம் கட்டுவது குறித்து தெரிவிக்க முடியும். தனுஸ்கோடிக்கு மீண்டும் ரயில் பாதை அமைத்து, ரயில் போக்குவரத்து தொடங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் நிலவிவரும் குடிநீர்ப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணப்படும் என்றார் அவர்.

முன்னதாக, பாம்பன் ரயில் பால நூற்றாண்டு விழாவை, பாம்பனில் நடத்த அந்த ஊராட்சித் தலைவர் பேட்ரிக் தலைமையில் பொதுமக்கள் ராகேஷ் மிஸ்ராவிடம் மனு அளித்தனர்.

SCROLL FOR NEXT