தமிழகம்

துரந்தோ ரயில் ஏ.சி. வகுப்பு கட்டணம் உயர்கிறது

டி.செல்வகுமார்

அதிவேக, வழிநில்லா, துரந்தோ ரயில்களின் ஏ.சி.வகுப்புக் கட்டணம் 10-ம் தேதி முதல் உயர்கிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் துரந்தோ ரயில்களின் புதிய கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜதானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களின் ஏ.சி.வகுப்புக் கட்டணங்களுக்கு இணையாக துரந்தோ எக்ஸ்பிரஸ் ஏ.சி. வகுப்பு ரயில்களின் கட்டணத்தையும் ரயில்வே வாரியம் உயர்த்தியுள்ளது. துரந்தோ ரயிலில் ஏ.சி. இல்லாத இருக்கைக் கட்டணத்தில் மாற்றம் இல்லை. புதிய கட்டண உயர்வு வரும் 10-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

10-ம் தேதிக்கு முன்னதாக ரயில் முன்பதிவு டிக்கெட் எடுத்தவர்களிடம் இருந்து பழைய கட்டணம் மற்றும் புதிய கட்டணத்திற்கு இடையிலான வித்தியாசத் தொகையை ரயில் பயணத்தின்போது ரயில் டிக்கெட் பரிசோதகர் வாங்கிக் கொள்வார். அல்லது முன்பதிவு டிக்கெட் எடுத்தவர்கள் முன்பதிவு மையத்தில் பழைய டிக்கெட்டைக் கொடுத்து வித்தியாசத் தொகையை செலுத்தி புதிய டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய கட்டண விவரம்

சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை, மதுரை, திருவனந்தபுரம், டெல்லிக்கு துரந்தோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை சென்ட்ரல் - கோவை துரந்தோ ரயில் (வண்டி எண்: 12243) புதிய கட்டணம், முதல் வகுப்பு ஏ.சி. - ரூ.1,560, இரண்டாம் வகுப்பு ஏ.சி. - 725. இந்த ரயில், சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை தவிர மீதமுள்ள 6 நாட்களும் இயக்கப்படுகின்றன.

சென்னை சென்ட்ரல் - மதுரை துரந்தோ ரயில் (வண்டி எண்: 22205) புதிய கட்டணம், முதல் வகுப்பு ஏ.சி. - ரூ.2,015, இரண்டாம் வகுப்பு ஏ.சி.- ரூ.1,130, மூன்றாம் வகுப்பு ஏ.சி.- ரூ. 745. இந்த ரயில், சென்னையில் இருந்து வாரம் இருமுறை திங்கள்கிழமை, புதன்கிழமைகளில் இயக்கப்படுகிறது.

சென்னை சென்ட்ரல் - திருவனந்த புரம் துரந்தோ ரயில் (வண்டி எண்: 22207) புதிய கட்டணம், முதல் வகுப்புஏ.சி.- ரூ.3,015, இரண்டாம் வகுப்பு ஏ.சி.-ரூ.1,715, மூன்றாம் வகுப்பு ஏ.சி.- ரூ.1,190. இந்த ரயில், சென்னையில் இருந்து வாரம் இருமுறை செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படுகிறது.

டெல்லி முதல்வகுப்பு ஏ.சி. ரூ.5,395

சென்னை சென்ட்ரல் - டெல்லி துரந்தோ ரயில் (வண்டி எண்: 12269) புதிய கட்டணம், முதல் வகுப்பு ஏ.சி. - ரூ.5,395, இரண்டாம் வகுப்பு ஏ.சி.- ரூ.3,270, மூன்றாம் வகுப்பு ஏ.சி.- ரூ.2,330. இந்த ரயில், சென்னையில் இருந்து வாரம் இருமுறை திங்கள்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படுகிறது.

ராஜதானி ரயிலுடன் ஒப்பீடு

சென்னை சென்ட்ரல் - டெல்லி ராஜதானி எக்ஸ்பிரஸில் முதல் வகுப்பு ஏ.சி. கட்டணம் ரூ.5,500 (துரந்தோ கட்டணம் ரூ.5,395), இரண்டாம் வகுப்பு ஏ.சி.கட்டணம் ரூ.3,235 (துரந்தோ கட்டணம் ரூ.3,270), மூன்றாம் வகுப்பு ஏ.சி.கட்டணம் ரூ.2,325 (துரந்தோ கட்டணம் ரூ.2,325). சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ராஜதானி எக்ஸ்பிரஸ் இரண்டாம் வகுப்பு ஏ.சி.கட்டணத்தைவிட துரந்தோ ரயில் கட்டணம் ரூ.35 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

துரந்தோ ரயில்களின் ஏ.சி.வகுப்புக் கட்டணங்கள் மட்டும் உயர்த்தப்பட்டுள்ளன. துரந்தோ ரயில்களின் ஏ.சி.இல்லாத இருக்கைக் கட்டணமும், மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களின் கட்டணமும் எதுவும் உயர்த்தப்படவில்லை.

SCROLL FOR NEXT