தமிழகம்

தமிழக அரசு நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

செய்திப்பிரிவு

தமிழக அரசு நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''நாடு முழுவதும் மத்திய நீர்வளத்துறை ஆணையம் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையின் படி தமிழகத்தில் நீர்வளம் வெகுவாக குறைந்து வருவதாகவும், வறட்சி ஏற்படும் நிலை உருவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளதாக மத்திய நீர்வள கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஏற்கெனவே தமிழகத்தில் போதிய மழையின்மை, காவிரி நீர் கிடைக்காதது, கடும் மழை, இயற்கை சீற்றம் போன்றவற்றால் விவசாயம் நலிவடைந்து வருகின்றது. இதனால் விவசாயிகள் நஷ்டமடைந்து விவசாயக் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். இச்சூழலில் தற்போது மத்திய நீர்வள கமிஷனின் எச்சரிக்கை தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வறட்சி ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மட்டுமல்லாமல் தமிழகம் ழுழுவதும் உள்ள ஆறு, ஏரி, குளம், குட்டை, வாய்க்கால் போன்ற அனைத்து நீர் நிலைப்பகுதிகளிலும் முறையாக தூர் வாரி, ஆழப்படுத்தி, அகலப்படுத்தி, கரையை உயர்த்தி நீர் ஆதாரத்தை சேமித்து, பாதுகாக்க வேண்டும். மழைக்காலங்களில் ஓடும் நீர் கடலில் சென்று வீணாக கலப்பதை தடுத்து, சேமித்து, அந்நீரை விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்துவதற்கு ஏதுவாக திட்டங்கள் வகுத்து செயல்படுத்த வேண்டும்.

மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கிராமம் முதல் நகரம் வரை முறையாக செயல்படுத்த உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். தற்போது தமிழகத்தில் வறட்சி ஏற்படும் என மத்திய நீர்வளத்துறை ஆணையம் அறிவித்துள்ளதால், அப்பகுதிகளில் நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கும், நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்துவதற்கும் தமிழக அரசுக்கு மத்திய அரசு அதிகநிதி ஒதுக்கி தர வேண்டும்'' என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT