தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பாமக சார்பில் முதல்வர் வேட்பாள ராக அறிவிக்கப்பட்டுள்ள அன்பு மணி ராமதாஸ் சாதனைகள் மற்றும் சுயவிவரக் குறிப்பை கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டார்.
தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு பாமகவின் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் அன்புமணி ராமதாஸ் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் சாதனைகள் மற்றும் சுயவிவரக் குறிப்பு (தமிழ் - ஆங்கிலம்) வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று நடந்தது. கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அன்புமணி ராமதாஸ் சாதனைகள் மற்றும் சுயவிவரக் குறிப்பை வெளியிட்டார்.
அதன்பின் ஜி.கே.மணி செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டி:
பாமக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் சாதனைகள் மற்றும் சுயவிவரக் குறிப்பு மக்களை சென்றடைய வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். இதனை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்க இருக்கிறோம்.
இந்த துண்டுப் பிரசுரத்தில் அன்புமணி ராமதாஸ் கல்வி, விளையாட்டு, பொழுதுபோக் குகள், சென்ற நாடுகள், உலகத் தலைவர்களுடன் சந்திப்பு, மருத்துவர் மற்றும் சமூக ஆர்வ செயல்பாடு, 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது செய்த சாதனைகள், வாங்கிய விருதுகள், தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்கள், நாடாளுமன்றத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் வெற்றி பெற்றது போன்றவைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் சட்டப்பேரவை தேர்தலில் பாமக வெற்றி பெற்று அன்புமணி ராமதாஸ் முதல்வரானால் செயல்படுத்த உள்ள திட்டங்களும் உள்ளன.
இந்த சுய விவர குறிப்பு பள்ளி, கல்லூரிகள் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட படித்த இளைஞர்களுக்கும், வீடு வீடாகவும் வழங்கப்படும். சட்டப்பேரவை தேர்தலில் பாமக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காது. அதிமுக, திமுக, கட்சிகள் பணத்தை நம்பித்தான் தேர்தலில் நிற்கிறார்கள். அதனால் அரசியல் கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தை எழுதி வாங்க வேண்டும்.
எந்த கட்சியுடனும் பாமக கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தை நடத்தவில்லை. எங்களுடனும் யாரும் பேசவில்லை. அதிமுக, திமுக, கட்சிகள் தவிர பாஜக உள்ளிட்ட மற்ற கட்சிகள் முதல்வர் வேட்பாளராக அன்புமணியை ஏற்றுக்கொண்டு எங்கள் கூட்டணிக்கு வரலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.