தமிழகம்

வெளிநாடுவாழ் நகரத்தார் தலைமுறையினர் பூர்வகுடி பழக்கங்களை அறிந்துகொள்ள கலாச்சார சுற்றுலா

செய்திப்பிரிவு

வெளிநாடுவாழ் நகரத்தார் இளம் தலைமுறையினர், தங்கள் பூர்வகுடி பாரம்பரியம், பண்பாடு, பழக்க வழக்கங்களை அறிந்துகொள்ளும் வகையில் கலாச்சாரச் சுற்றுலா நடத்தப்படுகிறது.

துபாயில் உள்ள இளம் தலை முறையினர் 25 பேர், செட்டிநாடு பாரம்பரியத்தை அறிந்துகொள்ள காரைக்குடிக்கு வருகை தந்துள்ளனர்.

பூம்புகாரை பூர்வீகமாகக் கொண்ட நகரத்தார் சமூகத்தினர் (நாட்டுக்கோட்டை செட்டியார்) வணிக நோக்கில் பல நாடுகளுக் கும் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். தமிழகத்தில் பல இடங்களில் வாழ்ந்தாலும் குறிப்பாக, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, புதுக்கோட்டை மாவட்டங்களில் சுமார் 76 கிராமங்களில் இச்சமூகத் தினர் பரவலாக வசிக்கின்றனர்.

இச்சமூகத்தினரில் 35 ஆயிரம் புள்ளிகள் (திருமணம் முடிந்தால் ஒரு புள்ளியாக கணக்கிடப்படும்) கொண்ட குடும்பத்தினர், சுமார் ஒன்றரை லட்சம் பேர் உள்ளனர். குறிப்பிட்ட மக்கள்தொகை கொண்ட நகரத்தார் சமூகத்தினருக்கு என தனி பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள், கட்டிடக் கலைகள் உள்ளன.

பர்மா, ரங்கூன், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய நாடுகளில் அவர்கள் வசிக்கின்றனர். அங்குள்ள நகரத்தார் சமூக இளம் தலைமுறையினர், தங்களது பாரம்பரியத்தை அறிய காரைக்குடி பகுதிக்கு ஆண்டுதோறும் வருகை தருகின்றனர்.

இந்த ஆண்டு துபாயில் வசிக்கும் சுமார் 13 வயதில் இருந்து 20 வயதுடைய நகரத்தார் சமூக மாணவ, மாணவியர் 20 பேர் வருகை தந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சிவகங்கை மாவட்டம், கோட்டையூரில் உள்ள வள்ளல் அழகப்பச் செட்டியாரின் பேத்தி வள்ளிமுத்தையா ஆச்சி வீட்டில் தங்கி, தமது வழித் தோன்றல்களின் வரலாற்றை அறிந்து வருகின்றனர்.

இதுகுறித்து வள்ளி முத்தையா ஆச்சி, ‘தி இந்து’விடம் கூறியதாவது: செட்டியார் சமூகத்தினர் கோயில் சார்ந்த குடிகள் ஆவர். எங்களது பூர்வகுடிகள் பூம்புகாரில் வசித்ததாகவும் வரலாறு உண்டு. கொண்டுவிற்று (வணிகம்) செய்வதற்காக ஆதிகாலத்தில் பர்மா, ரங்கூன் போன்ற நாடுகளுக்கு சென்ற செட்டியார் சமூகத்தினர் அங்கு வட்டித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, பல நாடுகளிலும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெளிநாடுகளில் வசித்தாலும் நகரத்தார் தங்கள் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரத்தை அறிந்து கொள்ள கலாச்சாரச் சுற்றுலா நடத் தப்படுகிறது. பிள்ளையார்பட்டி, வைரவன்பட்டி, மாத்தூர், இலுப்ப குடி, சூரக்குடி, இரணிக்கோயில், இளையாத்தங்குடி, நேமம், வேலங்குடி ஆகிய 9 ஊர்களில் உள்ள கோயில்களை நகரத்தார் வழிபடுவர். இக்கோயில்களுக்கு வெளிநாடு வாழ் மாணவர்களை அழைத்துச் சென்றோம்.

வெளிநாடுகளில் வசிப்பதால் அங்குள்ள கலாச்சாரத்தால் மாற்றம் ஏற்படாதவாறு, நமது பாரம்பரியத்தை அறிந்திட இந்த கலாச்சாரச் சுற்றுலா வழிவகை செய்கிறது என்றார்.

SCROLL FOR NEXT