வேந்தர் மூவிஸ் மதன் மீது 63 பேர் பண மோசடி புகார் கொடுத்திருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மதன். இவர் சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். ‘வேந்தர் மூவிஸ் மதன் 5 பக்கம் கொண்ட ஒரு கடிதத்தை தன்னுடைய லெட்டர் பேடில் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார். அந்தக் கடிதத்தில், காசியில் கங்கையில் சமாதி அடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 27-ம் தேதி மாயமான மதன், எங்கு இருக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை’ என வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதற்கிடையே, மருத்துவப் படிப்பு சீட் வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்துவிட்டதாக மதன் மீது பலர் போலீஸில் புகார் கொடுத்தனர்.
இந்நிலையில், மதனை கண்டுபிடிக்கக்கோரி அவரது முதல் மனைவி சிந்து, 2-வது மனைவி சுமலதா, தாயார் தங்கம் ஆகியோர் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் மனு கொடுத்தனர். காணாமல் போன மகனை கண்டுபிடித்து தரக்கோரி மதனின் தாயார் தங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து மதனை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டது. ஒரு தனிப்படை வாரணாசியிலும், மற்ற 3 தனிப்படையினர் நெல்லை மற்றும் வெளிமாநிலங்களிலும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மருத்துவப்படிப்பு மற்றும் மருத்துவ மேல்படிப்பு சீட் வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்துவிட்டதாக மதன் மீது 63 பேர் புகார் கொடுத்துள்ளனர். சுமார் ரூ.100 கோடி அளவுக்கு அவர் மோசடி செய்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன. மதன் கண்டுபிடிக்கப்பட்ட உடன் இந்த புகார்கள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.